கள்ளக் குறிச்சி பள்ளி மாணவி மரணம்: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை

கள்ளக் குறிச்சி பள்ளி மாணவி மரணம்: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த ஸ்ரீமதி என்ற பள்ளி மாணவி கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஸ்ரீமதியின் பெற்றோர் தனது மகள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

தொடர்ந்து பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை காவல்துறை சார்பில் வீடியோ பதிவும் செய்யப்பட்டது. இந்த நிலையில் உயிரிழந்த ஸ்ரீமதியின் உடற்கூறாய்வு அறிக்கையை பெறுவதற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஸ்ரீமதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில் ஸ்ரீமதியின் உயிரிழப்புக்கு காரணமான கல்வி நிறுவனத்தை மூட வேண்டும் கல்வி நிறுவனத்தின் தாளாளரை கைது செய்ய வேண்டும், சிபிசிஐடி விசாரணை வேண்டும் ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியபடி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து பேரணியாக வந்த ஸ்ரீமதியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் போலீசாரின் தடுப்பு கட்டைகளை தாண்டி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கள்ளக்குறிச்சி நகர பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் இருந்தபோதிலும் போராட்டக்காரர்கள் கல்வி நிறுவன தாளாளரை கைது செய்ய வேண்டும், கல்வி நிறுவனத்தை மூடி சீல் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கூட்டத்தை கலைத்தனர். அப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

இந்த நிலையில் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் , அவரது ஆடைகளிலும் ரத்த கரைகள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவரது உயிர் பிரிந்து இருப்பதாக தோன்றுகிறது. அவரது இதயம் உள்ளிட்ட பிற உறுப்புகள் ரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் இறப்பிற்கு காரணமான தனியார் பள்ளியை இழுத்து மூடி சீல் வைக்க வேண்டும் மற்றும் தனியார் பள்ளி தாளாளரை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கலவரமாக மாறியது. அங்கு வன்முறை வெடித்துள்ளது.