கோவை மாவட்டத்தில் மாவோயிஸ்டு ஊடுருவலை தடுக்க சிறப்பு பிரிவு .எஸ்.பி.பத்ரி நாராயணன் தகவல்.

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் வாளையார், ஆனைகட்டி, நடுப்புனி, வேலாந்தவளம் உட்பட 14 சோதனை சாவடிகள் உள்ளன. கேரள எல்லையை ஒட்டி உள்ள இந்த சோதனை சாவடிகளில் மாவோயிஸ்டுகள் கோவைக்குள் ஊடுருவதை தடுக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இந்த வழியாக வரும் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன. தமிழகத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கண்டறிய கியூ பிராஞ்ச் போலீசார் உள்ளனர் .ஆனாலும் கோவை மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தை கண்டறிய சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட போலீசில் பெரியநாயக்கன்பாளையம்,பேரூர், பொள்ளாச்சி, வால்பாறை, கருமத்தம்பட்டி மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய 6 சப் டிவிஷன்கள் உள்ளன. 2சப் டிவிஷனுக்கு ஒரு சிறப்பு பிரிவு போலீசார் என மொத்தம் 3 பேர் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் மலைவாழ் மக்களுக்கு ஏதும் அடிப்படை வசதிகள் தேவையா? என்பதையும் கண்காணித்து மாவட்ட போலீசருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் மூலம் மாவட்ட நிர்வாகத்திடம் கூறி உதவிட நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர மாவட்டங்களில் நிலவும் சிறிய அளவிலான பிரச்சனைகளை கண்டறிந்து உடனுக்குடன் சென்று நிவர்த்தி செய்திடவும் அறிவுறுத்தப்படுவார்கள். இதன் மூலம் சிறிய பிரச்சனைகள் பெரிய அளவிலான பிரச்சனைகள் பெரிய அளவிலான பிரச்சினையாக ஏற்படுவது தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.