1 மணி நேரத்திற்கு ரூ.15 செலவு; சார்ஜ் செய்தால் போதும் 10 மணி நேரம் ஓடும்… இ-டிராக்டர் கண்டுபிடிப்பு.. இளம் விவசாயி அசத்தல்-குவியும் பாராட்டுக்கள்.!!

குஜராத்தைச் சேர்ந்த இளம் விவசாயி ஒருவர் எலெக்ட்ரிக் டிராக்டரை கண்டுபிடித்து உருவாக்கி அசத்தியுள்ளார்.

இந்தியா ஒரு விவசாய நாடு மட்டுமல்ல, தங்களுக்குத் தேவையான கருவிகளை, புதிய விதைகளை தானே உருவாக்கிக்கொள்ளக்கூடிய ஏராளமான விவசாயிகளையும் கொண்டுள்ளது. என்ன தான் வேளாண் துறையில் தொழில்நுட்பம் விரைவான வளர்ச்சியை எட்டி வந்தாலும், விவசாயிகள் தங்களது குறைந்தபட்ச கல்வி அறிவு அல்லது அனுபவ அறிவை வைத்து உருவாக்கும் கருவிகள் கவனம் பெறுவது உண்டு.

அப்படி குஜராத்தைச் சேர்ந்த இளம் விவசாயி ஒருவர் எலெக்ட்ரிக் டிராக்டரை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.ஜாம் நகரைச் சேர்ந்தவர் 34 வயதான மகேஷ் பூட், சிறுவயதில் இருந்தே தந்தைக்கு விவசாயத்தில் உதவி செய்து வருகிறார். தந்தையுடன் பணிபுரியும் போது, ​​விவசாயத்தால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கும் எண்ணம் தோன்றியது.

2014-ம் ஆண்டு படிப்பை முடித்து விவசாயத்தில் முழுமையாக ஈடுபட்டபோது பூச்சிக்கொல்லி மற்றும் உரச் செலவைக் குறைக்க இயற்கை விவசாயத்தை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தார்.

அடுத்ததாக டிராக்டர் பராமரிப்பு மற்றும் பெட்ரோல், டீசலுக்கு அதிகத் தொகை செலவிடப்படுவதை குறைக்க முடிவெடுத்தார். அந்த எண்ணம் அவரை இ-டிராக்டர் ஒன்றினை உருவாக்க திட்டமிட வைத்தது. தான் கண்டுபிடித்த இ-டிராக்டருக்கு ‘வ்யோம்’என பெயரிட்டுள்ளார்.

மகேஷ் பூட் இன்ஜினியரிங் படித்தவர் கிடையாது. ஆனால் தனது சொந்த முயற்சியால் இ- டிராக்டரை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து மகேஷ் பட் கூறுகையில்,

“எனது தந்தை படித்த விவசாயி. அதனால்தான் அவர் எப்போதும் விவசாயத்தில் முதலீடு மற்றும் அதன் நன்மைகளை ஆண்டு இறுதியில் யூகித்துக்கொண்டே இருந்தார். நான் அவரிடமிருந்து விவசாயம் செய்ய கற்றுக்கொண்டேன், மேலும் அதிக லாபம் ஈட்டுவதற்காக செலவுகளை குறைப்பது எப்படி என அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்,” என்கிறார்.

இதுவரை பலரும் எலெக்ட்ரிக் சைக்கிள், ஸ்கூட்டர், பைக் மற்றும் கார்களை உருவாக்கிய நிலையில், விவசாயத்திற்காக இ-டிராக்டரை கண்டுபிடித்த மகேஷ் பூட் குறித்த செய்தி சோசியல் மீடியாவில் தாறுமாறாக வைரலானது. இதனையடுத்து அவர் கண்டுபிடித்த ‘வ்யோம்’எனும் எலெக்ட்ரிக் டிராக்டரை வாங்க விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மகேஷ் இதுவரை நாடு முழுவதும் இருந்து சுமார் 21 இ-டிராக்டர்களுக்கானஆர்டர்களைப் பெற்றுள்ளார். டிராக்டர் சந்தையில் புதியதாக அறிமுகமாகியுள்ள இதற்கு ஆரம்பமே அசத்தலான வரவேற்பு கிடைத்து வருகிறது.

கிராமத்தில் வசிக்கும் சாதாரண பட்டதாரி இளைஞரான இவர், எவ்வித பொறியியல் குறித்த கல்வி அறிவும் இன்றி சுமார் 5 லட்சம் ரூபாய் செலவில் இ-டிராக்ட்ரை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

மகேஷிற்கு இ-டிராக்டரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் அதனை எப்படி உருவாக்குவது என்ற அறிவை அவரால் பெற முடியவில்லை. எனவே உத்தரபிரதேசத்தில் இருந்து இ-ரிக்ஷா தயாரிக்கும் பயிற்சி எடுக்க நினைத்தார். எனவே ஷாஜஹான்பூரில் இ-ரிக்ஷா தயாரிக்கக் கற்றுக்கொண்டார். இருப்பினும், இ-டிராக்டரை உருவாக்குவதே அவரது நோக்கமாக இருந்தது.

2021-ம்ஆண்டு பயிற்சிக்குப் பிறகு, இ-டிராக்டரை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதனை புதிய முறையில் தயாரிக்க ஆரம்பித்தார். டிராக்டரின் பேட்டரி முதல் அதன் உடல் வரை அனைத்தையும் அவரே தயாரித்துள்ளார்.

ஏறக்குறைய ஏழு மாதங்கள் கடின உழைப்பு மற்றும் பல முயற்சிகளுக்குப் பிறகு, அவர்கள் இறுதியாக வெற்றியைப் பெற்றனர். இவர் கடந்த நான்கு மாதங்களாக இந்த இ-டிராக்டரை தனது பண்ணையில் பயன்படுத்தி வருகிறார். அந்த டிராக்டருக்கு தனது மகனின் பெயரான ‘வ்யோம்’ என பெயர் வைத்துள்ளார்.

இ-டிராக்டர் வ்யோமை ஒருமுறை சார்ஜ் செய்தாலே 10 மணி நேரம் வரை பயன்படுத்தக்கூடியது.

“இந்த மின்சார டிராக்டர் 22 ஹெச்பி ஆற்றலை கொண்டுள்ளது. இது 72 வாட் லித்தியம் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது ஒரு நல்ல தரமான பேட்டரி, அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியமில்லை. இந்த டிராக்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் ஆகும், அதன் பிறகு 10 மணி நேரம் வரை இயக்கும். ஒரு மணி நேரத்திற்கு 15 ரூபாய் மட்டுமே செலவாகும்,” எனத் தெரிவித்துள்ளார் மகேஷ்.

இது தவிர, அவர்கள் இந்த டிராக்டரை ஒரு செயலியுடன் ஒருங்கிணைத்துள்ளார். அதன் மூலம் நீங்கள் அந்த டிராக்ட்ரை பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.