கோவையில் ‘இன்டெக் 2022’ சர்வதேச இயந்திர மற்றும் தொழில் கண்காட்சி-ரூ.1200 கோடிக்கு வர்த்தகம்.!!

கோவை: கோவையில் கொடிசியா சார்பில் நடைபெற்ற ‘இன்டெக் 2022’ சர்வதேச இயந்திர மற்றும் தொழில் வர்த்தக கண்காட்சியில் எதிர்பார்ப்பை விட அதிகமாக ரூ.1200 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ்பாபு தெரிவித்தார்.

கோவை கொடிசியா வர்த்தக மைய வளாகத்தில் கடந்த 2-ம் தேதி தொடங்கிய கண்காட்சி, நேற்று நிறைவு பெற்றது.

இந்த கண்காட்சியில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, சீனா, தைவான் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், மகாராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், டெல்லி,ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய வெளி மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்கள், தமிழகத்தில் கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப் படுத்தியிருந்தன.

மொத்தமாக 6 அரங்குகளில் 410 ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. ரூ.800 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதுகுறித்து, ‘இந்து தமிழ் திசை’செய்தியாளரிடம் கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ்பாபு கூறும்போது, ‘நடப்பாண்டு இன்டெக் கண்காட்சி எதிர்பார்த்ததை விட வெற்றியாக அமைந்துள்ளது. இந்தியா முழுவதும் இருந்தும், சர்வதேச நாடுகளில் இருந்தும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தக பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.

லேசர் தொழில்நுட்பம், ரோபோ தொழில்நுட்பம், சிஎன்சி, ஸ்பிண்டில் டூலிங் தொழில்நுட்ப தயாரிப்புகள், ஹைட்ராலிக் தொழில்நுட்பங்கள், வெல்டிங் மற்றும் கட்டிங் உட்பட அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து தொழில்நுட்பங்களும் இந்த கண்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

எங்களது எதிர்பார்ப்பையும் மீறி ரூ.1200 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. 70 சதவீத நிறுவனங்கள் அடுத்த கண்காட்சியில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன. 30 சதவீத நிறுவனங்கள் தங்களுக்கான ஸ்டால்களையே உறுதி செய்து சென்றுள்ளனர்’ என்றார்.