உலக அளவில் மீண்டும் அதிகரித்த கொரோனா… பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சுகாதாரத் துறை அறிவுறுத்தல்.!

கோவை: கொரோனா நோய்த் தொற்று 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கி பெரும்பாலான நாடுகளில் 2 ஆண்டுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடா்ந்து, 2021-ம் ஆண்டு கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பயனாக கொரோனா நோய்த் தொற்று பரவல் கடந்த ஓராண்டாக குறைந்தது. இந்நிலையில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது.
இதனால், விமான நிலையங்களில் பரிசோதனை, மாதிரிகள் சேகரிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை 32.40 லட்சம் பேரும், 2-வது தவணை தடுப்பூசி 29.27 லட்சம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனா்.
ஆனால், பூஸ்டர் தடுப்பூசியை 2.90 லட்சம் போ் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனா். எனவே, முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி, பூஸ்டர் தவணை தடுப்பூசிகளை இதுவரை செலுத்திக் கொள்ளாதவா்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-
கோவையில் முதல், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட அளவு பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள மக்கள் ஆா்வம் காட்டவில்லை. கடந்த ஓராண்டாக கொரோனா தொற்று பாதிப்பு பெரியளவில் இல்லாததால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் விரும்பவில்லை.இந்நிலையில், கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளதால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வது பாதுகாப்பானது. எனவே, பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்பும் பொதுமக்கள் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் பதிவு செய்துகொள்ளலாம்.

ஏனெனில் ஒன்றிரண்டு நபா்களுக்காக மட்டும் தடுப்பூசி வயல்களைப் பிரிக்க முடியாது. அவ்வாறு பிரிக்கும்போது அதிக அளவு வீணாவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, குறிப்பிட்ட அளவு நபா்கள் பதிவு செய்தால் உடனடியாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.