மீண்டும் மீண்டும் சர்ச்சை… பண்ணாரி வன சோதனை சாவடியில் வீடியோ எடுத்த வாகன ஓட்டுநரின் செல்போன் சாவியை பறித்து வைத்து கொண்டு மிரட்டிய வனத்துறையினர்.!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பண்ணாரி வனச் சோதனை சாவடியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வாகன ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்டு வனத்துறையினர் ஓட்டுநரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் நேற்று தாளவாடி மலைப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டுநர் ஜெகா என்பவரை பண்ணாரி வன சோதனை சாவடியில் பணியில் இருந்த வனக்காப்பாளர் சித்ரா, வாகன நுழைவு கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மனோஜ், அருண் பாண்டியன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து வனத்துறை சோதனை சாவடியில் வீடியோ எடுத்த ஓட்டுநர் ஜெகாவின் செல்போன் மற்றும் வாகனத்தின் சாவியை பறித்து வைத்துக் கொண்டு மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து ஓட்டுநர் ஜெகா வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்  பகிர்ந்துள்ள வீடியோவில் கூறியதாவது. தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் வழியாக பழனிக்கு தினமும் நான் மாட்டு தீவனம்‌ பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு லாரியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பண்ணாரி சோதனை சாவடியில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு ஓட்டுநரை வனத்துறையினர் லஞ்சம் கேட்டு தாக்கியபோது நடந்த சம்பவத்தை நான் செல்போனில் வீடியோ எடுத்தேன். இதை அறிந்த வனத்துறையினர் நேற்று நான் பண்ணாரி வனசோதனை சாவடியை வாகனத்தில் கடந்து செல்லும் போது தடுத்து நிறுத்தி வன சோதனை சாவடியில் நடைபெற்ற பிரச்சனையின் வீடியோ எடுத்து வெளியிட்டது நீதானே எனக் கூறியபடி எனது செல்போனை பறித்ததோடு வாகனத்தின் சாவியையும் பறித்து வைத்து கொண்டனர். இந்த சாலையில் நீ எப்படி வாகனம் ஓட்டுகிறாய் என பார்த்துக் கொள்கிறோம் என மிரட்டியதோடு எனது செல்போனை காவல்துறை சோதனை சாவடியில் பணியில் இருந்த காவலர் சரவணன் என்பவரிடம் கொடுத்து எனது செல்போனில் இருந்த புகைப்படம், வீடியோ மற்றும் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை ரீசெட் என்ற முறையில் அழித்துவிட்டு செல்போன் மற்றும் வாகனத்தின் சாவியை கொடுக்காமல் இழுத்தடித்தனர். நான் தாளவாடியில் விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களை தொடர்பு கொண்டு பேசிய பின்பு அவர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் பேசியதை தொடர்ந்து காலை 11 மணிக்கு பறித்த செல்போன் மற்றும் சாவியை மாலை 3 மணிக்கு திருப்பி கொடுத்தனர். மேலும் நீ இந்த சாலையில் எப்படி வாகனம் ஓட்டுகிறாய் என பார்க்கிறோம் என மிரட்டியதால் எனக்கு மிகவும் பயமாக உள்ளது என அதில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சத்தியமங்கலம் வனச்சரகர் பழனிச்சாமியிடம் கேட்டபோது இது சம்பந்தமாக விசாரிக்கப்படும் என தெரிவித்தார். செல்போனில்  இருந்த ஆதாரங்களை காவல்துறை சோதனை சாவடி பணியில் இருந்த காவலர் சரவணன் என்பவர் அழித்தது  குறித்து சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் கேட்டபோது அவர் காவலர் சரவணனை நேரில் வரவழைத்து விசாரிக்கப்படும் என தெரிவித்தார். ஏற்கனவே கடந்த இரு தினங்களுக்கு முன்பு வனத்துறை சோதனை சாவடியில் வனத்துறை ஊழியர்கள் லஞ்சம் கேட்டு தகராறில் ஈடுபட்ட நிலையில் மீண்டும் வீடியோ எடுத்ததாக குற்றம் சாட்டி வாகன ஓட்டுநரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்கள் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்..