சென்னை தொழிலதிபரிடம் பணமோசடி செய்த வழக்கில் சிக்கிய கோவை ஜோதிடர் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி- தாயார் பலி..!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கருப்பையா, டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு சொந்தமாக செங்கல்பட்டில் இடம் உள்ளது.

அந்த இடத்தின் மீது நிலப்பிரச்சினை இருந்து வந்த நிலையில், இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஜோதிடர்பிரிவு துணை தலைவர் பிரசன்ன சுவாமி என்பவரை அணுகியுள்ளார். அவர் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் இந்த நிலப்பிரச்சினையை சரி செய்து தருவதாக கூறி கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் ரூ.25 லட்சத்து 59 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார்.

மேலும் மாங்கல்ய பூசை செய்தால் விரைவில் பிரச்சினை தீரும் என கூறியதால், தொழிலதிபர் கருப்பைய்யா தனது மனைவியின்15 சவரன் தங்க நகையினையும் கொடுத்துள்ளார். நிலப்பிரச்சினையை தீரத்து வைக்காததால் இது குறித்து கருப்பையா செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து இந்து மக்கள் கட்சி ஜோதிடபிரிவு துணை தலைவர் பிரசன்ன சுவாமிகள், அவரது மனைவி அஸ்வினி, ஆர்.எஸ்.புரம் பகுதியை ஹரபிரசாத், பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நான்கு பேர் மீதும் மோசடி, நம்பிக்கை மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தன் மீதும், தன் மனைவி மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யததால் விரக்தி அடைந்த பிரசன்ன சுவாமிகள் தனது வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். மனைவி அஸ்வினி, மகள் ஹர்சினி மற்றும் தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோருடன் பூச்சி மருந்தை குடித்த பிரசன்ன சுவாமிகள் தங்கள் தற்கொலைக்கு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் கருப்பையாவும் அவரது குடும்பத்தினரும் தான் காரணம் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வீடியோ பதிவை செல்போனில் பதிவு செய்து வாட்ஸ் அப் மூலம் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர்.

இதனிடையே நீண்ட நேரமாக வீடு திறக்கப்படாததால் அருகில் இருந்தவர்கள் வீட்டின் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மயங்கிய நிலையில் பிரசன்ன சுவாமிகள் உட்பட நான்கு பேரும் கிடந்த நிலையில் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகு அழைத்துச் சென்றனர்.
கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது வரும் வழியிலேயே பிரசன்ன சுவாமிகளின் தாயார் கிருஷ்ணகுமாரி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.மேலும் பிரசன்ன சுவாமிகள், அவரது மனைவி, மகள் ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.