வாழைக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டது வேளாண் பல்கலைக்கழகம் ..!!

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்
கூறியிருப்பதாவது:-
வேளாண் உழவர் நல அமைச்சகத்தின் 2-வது முன்கூட்டிய அறிக்கையின் படி
2021-22 ஆம் ஆண்டு இந்தியாவில் வாழை 9.59 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில்
சாகுபடி செய்யப்பட்டு 3.51 கோடி டன்கள் உற்பத்தியாகும் என்று
அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தேனி, கன்னியாகுமரி, கோவை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி
ஆகிய மாவட்டங்களில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. இப்பகுதியில்
பூவன், கற்பூரவள்ளி, நேந்திரன் ஆகிய ரகங்கள் அதிகளவில்
பயிரிடப்படுகின்றன. இவற்றில் பூவன், கற்பூரவள்ளி ஆகியவற்றை இலை பயன்பாட்டுக்காக பயிரிடுகின்றனர். கோவை சந்தைக்கு புதுக்கோட்டை, திருவையாறு, கடலூர் பகுதிகளில் இருந்து பூவன் வரத்தும், சத்தியமங்கலம், கோபி,
மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருந்து கற்பூரவள்ளி வரத்தும்,
மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து நேந்திரன் வரத்தும் உள்ளது.
கேரளத்தில் இருந்து வரும் நேந்திரன் வரத்தானது இந்த மாதத்தில் தொடங்கும்
என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை
எடுக்க ஏதுவாக விலை முன்னறிவிப்பு குழு, கடந்த 17 ஆண்டுகளாக கோவை
சந்தைகளில் பூவன், கற்பூரவள்ளி, நேந்திரன் விலை, சந்தை ஆய்வுகளை
மேற்கொண்டது.
ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், ஆகஸ்டு-செப்டம்பர் 2022 முடிய தரமான
பூவன் வாழையின் பண்ணை விலை ரூ.17 முதல் ரூ.18 வரையும், கற்பூர வள்ளி
ரூ.20 முதல் ரூ.22 வரையும், நேந்திரன் விலை ரூ.38 முதல் ரூ.40 வரை
இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இந்த சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்கலாம். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தை அனுகலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.