தொடரும் கொடூர தாக்குதல் … ஹமாஸ் படையை முழுமையாக அழித்து ஒழிப்போம்- இஸ்ரேல் சூளுரை..!

டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் நடக்கும் மோதல் தீவிரமாகி வரும் நிலையில், ஹமாஸ் படையினர் முற்றிலுமாக அழித்து ஒழிக்க உள்ளதாக இஸ்ரேல் சூளுரைத்துள்ளது. இதனால் அங்கே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் நாட்டின் மீது காசாவில் இருந்து ஹமாஸ் படை சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடங்களில் 5000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்ரேல் மீது கடந்த காலங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்ற போதிலும், இந்தளவுக்கு ஒரு மோசமான தாக்குதலை அவர்கள் துளியும் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை. இஸ்ரேல் உளவு அமைப்புகளும் இதில் கோட்டைவிட்டது.

மேலும், ஒரே நேரத்தில் அதிகப்படியான ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிப் பாய்ந்ததால் அயர்ன் டோம் அமைப்பாலும் அத்தனை ஏவுகணைகளையும் சமாளிக்க முடியவில்லை. இதனால் இஸ்ரேல் நாட்டில் பல இடங்களில் ஏவுகணைகள் நேரடியாகத் தாக்கியது. மேலும், பாராசூட் மற்றும் ஜீப் மூலம் இஸ்ரேல் நாட்டிற்குள் வந்த ஹமாஸ் படையினர் சரமாரியாகத் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். இதில் அப்பாவி மக்கள் பலரும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இஸ்ரேல் நாட்டில் இருந்து பலரையும் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

இந்தத் தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்காத இஸ்ரேல் சற்று தடுமாறிப் போய்விட்டது என்பதே உண்மை. இருப்பினும், அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல் பதிலடி தரத் தொடங்கியது. காசா பகுதியில் வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. ஹமாஸ் படையினர் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இஸ்ரேலுக்கு உதவும் வகையில் அமெரிக்கா ஏற்கனவே ஆயுதங்களையும் அனுப்பியுள்ளது.

இப்படி இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தாக்குதலை வழிநடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு அவசரக்கால அரசு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு உட்சபட்ச அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தங்கள் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் படையை முற்றிலுமாக அழித்து ஒழிப்போம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நெதன்யாகு பேசுகையில், “ஹமாஸ் படையைச் சேர்ந்த ஒவ்வொரு நபரும் கொல்லப்படுவார்.. நாங்கள் ஒருவரை கூட விடாமல் ஹமாஸ் படையை முழுமையாக அழித்து ஒழிப்போம்” என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தரைவழித் தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்த உள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோசவ் கல்லன்ட் அறிவித்துள்ளார். ஒட்டுமொத்த ஹமாஸ் படைகளையும் அழிக்க உள்ளோம் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.

மேலும், ஹமாஸ் படையினர் இஸ்ரேல் நாட்டில் குழந்தைகளைக் கூட விட்டுவைக்காமல்.. அவர்கள் தலையையும் வெட்டி கொடூரமாகக் கொன்றுள்ளதாகவும் இதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் கான்ரிகஸ் கூறினார்.

ஏற்கனவே இஸ்ரேல் படையினர் காசா பகுதியைச் சுற்றி வளைத்து முடங்கியுள்ளனர். இதனால் காசா பகுதியில் இருக்கும் 23 லட்சம் பேர் மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும், அங்கே 3.40 லட்சம் பேர் தங்கள் வீடுகளையும் இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அகதிகளாகத் தப்பிச் செல்லும் பாலஸ்தீன மக்களுக்கு அண்டை நாடான எகிப்து அடைக்கலம் கொடுக்க மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.