செங்கல்பட்டில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி தணிகா போலீசாரால் சுட்டுபிடிக்கப்பட்டார்.
செங்கல்பட்டு அருகே போலீஸ் பிடியிலிருந்து தப்பி செல்ல முயன்ற ஏ+ ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் படுகாயம் அடைந்து அடைந்த ரவுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் தணிகா என்கிற தணிகாசலம். இவர் மீது திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் ஏ + ரவுடி பிரிவில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் தணிகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த தணிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி செங்கல்பட்டு தனிப்படை போலீசார், சென்னையில் பதுங்கி இருந்த தணிகாவை நேற்றிரவு கைது செய்து சித்தாமூர் காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.
அப்போது செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பகுதியில் வந்தபோது தணிகா போலீசார் பிடியில் தப்பிப்பதற்காக காவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் காரில் இருந்து தப்பியோட முயற்சி செய்த போது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் தணிகாவின் வலது கை, வலது கால் ஆகிய பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. தொடர்ந்து அவரை மீட்ட போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து தணிகாவை மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளாக இருக்கும் தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், கூடுவாஞ்சேரி மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகள் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக இப்பகுதிகளில் ஏராளமான சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றனர். இதுபோன்ற தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனத்தை மையமாகக் கொண்டு, பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக்கி வருகிறது. அதே போன்று சிறு சிறு திருட்டுகளும் இப்பகுதிகளில் அதிகரித்துள்ளது.
சிறிய திருட்டு தொழிலில் ஈடுபட துவங்கும் இளைஞர்கள் படிப்படியாக, கஞ்சா விற்பது கொள்ளையடிப்பது மற்றும் கொலை செய்வது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது. பின்பு சுயலாபத்திற்காகவும் பணம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் நோக்கத்திற்காக இது போன்ற இளைஞர்கள் அப்பகுதியில் பிரபல ரவுடிகளாக இருக்கும் அவர்கள் கீழ் செயல்படுவதும், இதன் மூலம் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட செயல்களில் செய்து பணம் சம்பாதிப்பதும் வாடிக்கையாக இருகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் இந்த தொழில் நிறுவனங்களிடம், மாதம் மாமுல் வாங்குவது அதே போன்று தொழிற்சாலைகளில் இருந்து கழிவுகளை எடுப்பது உள்ளிட்ட போட்டோ போட்டியின் காரணமாக சில நேரங்களில் ரவுடி கும்பலுக்கு இடையே கொலை சம்பவங்களும், அரங்கேறி வருகிறது. இதுபோன்ற குட்டி ரவுடிகள் மற்றும் பெரிய ரவுடிகளை ஒடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் , கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் ஒரு என்கவுண்டர் அதற்கு சில வாரங்களுக்கு முன்பு கூடுவாஞ்சரில் இரட்டை என்கவுண்டர் நடந்த நிலையில் தான், போலீசார் இப்பொழுது மற்றொரு ரவுடியை சுட்டு பிடித்துள்ளனர் .