சென்னை அண்ணா அறிவாலயத்தில் விடியலில் முளைத்த சூரியக் கதிர்களுக்கு வாழ்த்துக்கள்- முதல்வர் ஸ்டாலின்.!!

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், காலையும் மாலையும் ஆறு மணிநேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டே, உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலில் வென்ற மக்கள் பிரதிநிதிகளையும், அவர்களது உறவினர்கள் மற்றும் வெற்றிக்காக உழைத்த தொண்டர்களையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:
முப்பதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள், அவர்களது குடும்பத்தினர், வெற்றிக்காக உழைத்த உடன்பிறப்புகள் என ஆயிரக்கணக்கானோர் என்னை சந்தித்து வெற்றிக்களிப்பை பகிர்ந்து கொண்டனர். உடன்பிறப்புகளின் முகத்தில் ஏற்படும் மலர்ச்சியையும் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியையும் காணும்போது கால் வலியும் உடல் அயர்ச்சியும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகுகிறது. விடியலில் முளைத்த சூரியக் கதிர்களை வாழ்த்தினேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.