தாது மணல் கொள்ளையை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு – நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்.!!

தமிழ்நாட்டில் 2000-01ஆம் ஆண்டுகள் முதல் நடைபெற்று வரும் தாது மணல் கொள்ளை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட கடலோரப் பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பாக கடந்த 2015ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், தமிழ்நாடு தொழில்துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தாதுமணல் எடுப்பதற்காக, ஏழு நிறுவனங்களுக்கு, திருநெல்வேலியில் 52 உரிமங்கள், தூத்துக்குடியில் 6, கன்னியாகுமரியில் 6 என, 64 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து தாது மணல் எடுப்பதற்கு கொண்டு செல்வதற்கும் 2013-ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கும் முன்பும், தடை விதித்த பிறகும், சட்டவிரோதமாக தாதுமணல் எடுத்ததால் ஏற்பட்ட ஐந்து ஆயிரத்து 832 கோடியே 44 லட்சம் ரூபாய் இழப்பை, தனியார் தாதுமணல் ஏற்றுமதியாளர்களிடமிருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனியார் நிறுவனங்கள் வசம் உள்ள ஒரு கோடியே 55 லட்சம் டன் தாது மணலை பறிமுதல் செய்து மத்திய அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாது மணல் கொள்ளை குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி மற்றும் சத்யபிரதா சாஹு தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுக்கள் அளித்த அறிக்கையில், மூன்று மாவட்டங்களிலும் 234 ஹெக்டேர் பரப்பில் ஒரு கோடியே ஒரு லட்சம் டன் தாது மணல் சட்டவிரோதமாக எடுக்கபட்டதும், ஒரு கோடியே 55 லட்சம் டன் இருப்பில் உள்ளதும் தெரியவந்துள்ளது என்றும் அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இருப்பில், உள்ள ஒரு கோடியே 55 லட்சம் டன் தாது மணலை மத்திய அரசு நிறுவனத்திடம் ஒப்படைக்க நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.