கோவில்பட்டியில் பரபரப்பு … கூட்டணி தர்மத்தை மீறிய எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி… இபிஎஸ் புகைப்படம் எரித்து பாஜக போராட்டம்..!

டந்த மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வரை அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நிலைப்பதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

அதேபோன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இரட்டை இலை சின்னம் இருக்கும் அதிமுக அணியுடன் கூட்டணி இருப்பதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழக பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அவ்வாறு இணையும் நிர்வாகிகள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கூட்டணியில் இருந்து கொண்டு பாஜக நிர்வாகிகளை அதிமுகவில் இணைப்பதற்கு பாஜக தரப்பு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் “கொங்கு மண்டலம் தங்களின் கோட்டை என சொல்லி அவர்களை வாக்காளர்கள் விரட்டியடித்துள்ளனர். 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றவர்கள் இன்னும் மூச்சு கூட விடவில்லை. அவர்கள் தங்களின் கோட்டையை மறந்து விட வேண்டியது தான். பாஜக தான் தமிழகத்தின் எதிர்காலம்” என அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டு இருந்தார்.

இதற்கு அதிமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “பாஜகவில் இருந்து ஆட்களை சேர்த்து தான் நீங்கள் பெரிய கட்சி என்று நிரூபிக்க வேண்டுமா..? அந்த நிலைக்கு நீங்கள் வந்து விட்டீர்களா.? ஒவ்வொரு வினைக்கும் நிச்சயம் எதிர்வினை உண்டு” என அதிமுகவை எச்சரிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தை எரித்து பாஜக இளைஞர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி தர்மத்தை மீறி அதிமுக செயல்படுவதாக பாஜக இளைஞரணி குற்றம் சாட்டி இந்த போராட்டத்தை நடத்தி வருகிறது.

பாஜகவில் இருந்து விலகிய நிர்வாகிகளை அதிமுகவில் சேர்த்துக் கொண்ட கூட்டணி தர்மத்தை போற்றத் தவறிய துரோகி எடப்பாடி பழனிசாமியை கண்டிக்கிறோம் என போஸ்டர் ஒட்டி தங்களின் எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றனர். இதனால் கோவில்பட்டி பகுதியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.