சாலையோர வனப்பகுதியில் வீசப்பட்ட பாலிதீன் காகிதம், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் சேகரிப்பு..!

 ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குய்யனூர் பஸ் ஸ்டாப் முதல் திம்பம் மலை உச்சி வரை சாலையின் இருபுறமும் வனப்பகுதி ஓரம் வீசப்பட்ட பாலிதீன் காகிதங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் சேகரிக்கும் பணி நடைபெற்றது. சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் (பொ) சுதாகர் தலைமையில் நடைபெற்ற பணியில் வனத்துறை ஊழியர்கள், தனியார் கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காலை முதல் மதியம் வரை சாலையோர வனப்பகுதியில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் மொத்தம் 250 மூட்டைகள் அளவிற்கு பாலித்தீன் காகிதங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், மற்றும் கண்ணாடி பாட்டில்கள் சேகரிக்கப்பட்டது. சாலையோர வனப்பகுதியில் வீசப்படும் பாலித்தீன் காகிதங்களை குரங்கு, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உட்கொள்வதாலும், கண்ணாடி பாட்டில்களை காட்டு யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் எதிர்பாராதவிதமாக மிதிக்கும் போது காலில் காயம் ஏற்பட்டு வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதால் சாலையோர வனப்பகுதியில் எந்த பொருட்களையும் வீசுவதை தவிர்க்க வேண்டும் என வனச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளிடம் அறிவுறுத்தினர். இப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் வனத்துறை மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் தேநீர், உணவு வழங்கப்பட்டது..