கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் மகேஸ்வரி நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 65). தொழிலதிபர்.
இவர் கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலை சமந்தமாக ஓசூர் சென்றார். பின்னர் நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம், 100 அமெரிக்க டாலர்கள் மற்றும் 100 சிங்கப்பூர் டாலர்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. டாலர்களின் மதிப்பு ரூ.13 ஆயிரம் ஆகும். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தங்களது உருவம் கேமராவில் பதிவாகாமல் இருக்க வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிரா இணைப்பை துண்டித்து டி.வி.ஆர் பதிவுகளை தூக்கி சென்றுள்ளனர்.
இதுகுறித்து மாரியப்பன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் வீட்டில் இருந்த திருடர்கள் சி.சி.டி.வி காமிராக்களை திருடி சென்றதால் அந்த பகுதியில் உள்ள காமிராக்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலதிபரின் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் வெளிநாட்டு டாலர்களை திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Leave a Reply