நாளை முதல் டிசம்பர் 8-ந் தேதி வரை… கோவை- போத்தனூர் இடையே 5 ரயில்களின் சேவை மாற்றம்..!

கோவை : போத்தனூர்-கோவை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (16-ந் தேதி) முதல் டிசம்பர் 8-ந் தேதி வரை 5 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-,
ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:13352) கோவைக்கு பதில், போத்தனூர்-இருகூர் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில் போத்தனூர் ெரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். சொர்ணூர்-கோவை இடையிலான ரயில் (எண்:06458), மதுரை-கோவை இடையிலான ரயில் (எண்:16722) ஆகியவை கோவைக்கு பதில் போத்தனூர் ரயில்நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இந்த ரயில்கள் போத்தனூர்-கோவை இடையே இயக்கப்படாது. கோவையில் இருந்து மதியம் 2.20 மணிக்கு கண்ணூர் புறப்பட்டுச் செல்லும் ரயில் (எண்:16608), கோவைக்கு பதில் போத்தனூர் ரயில்நிலையத்தில் இருந்து மதியம் 2.34 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். கோவையில் இருந்து மாலை 4.30 மணிக்கு சொர்ணூர் புறப்பட்டுச் செல்லும் ரயில் (எண்:06459), கோவைக்கு பதில் போத்தனூரில் இருந்து மாலை 4.41 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். இந்த ரயில்கள் கோவை-போத்தனூர் இடையே இயக்கப்படாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.