கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம்-அடுத்த மாதம் 2ம் தேதி நடக்கிறது.!!

கோவை: கோவை கோனியம்மன் கோயில் தேரோட்டம் அடுத்த மாதம் 2ம் தேதி நடக்கிறது. கோவையின் காவல் தெய்வமான பெரியகடை வீதி கோனியம்மன் கோயில் தேர்திருவிழா தேர் முகூர்த்தக்கால் நடும் விழாவுடன் வரும் 14ம் தேதி துவங்குகிறது.

இதனை தொடர்ந்து 15ம் தேதி இரவு 7.30 மணிக்கு பூச்சாட்டு விழாவுடன் தேர் திருவிழா நடக்கிறது. இதையடுத்து, வரும் 21ம் தேதி கிராம சாந்தி, 22ம் தேதி கொடியேற்றம், இரவு 7.30 மணிக்கு அக்னி சாட்டு, 23ம் தேதி புலி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 24ம் தேதி கிளி வாகனம், 25-ம் தேதி சிம்ம வாகனம், 26ம் தேதி அன்ன வாகனம், 27ம் தேதி காமதேனு வாகனத்தில் வீதி உலா, 28ம் தேதி வெள்ளை யானை வாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது.

மார்ச் 1-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 2ம் தேதி மதியம் 2.05 மணிக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ராஜவீதி தேர் திடலில் இருந்து புறப்படும் தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் திடலை அடையும். இதனை தொடர்ந்து மார்ச் 3ம் தேதி பரிவேட்டை, குதிரைவாகன உலா, 4ம் தேதி தெப்ப உற்சவமும், 5ம் தேதி தீத்தவாரி, கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

மேலும், மார்ச் 6ம் தேதி நடக்கும் வசந்த விழாவுடன் தேர் திருவிழா நிறைவடைகிறது. கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து தேர் திருவிழா நடத்தப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் செல்வம்பெரியசாமி மற்றும் தக்கார் விஜயலட்சுமி ஆகியோர் செய்துள்ளனர்.