டெல்லியில் நதிநீர் இணைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் – அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு..!

சென்னை: டெல்லியில் இன்று நடைபெறும் தேசிய அளவிலான நதிநீர் இணைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்கிறார்.

தீபகற்ப நதிகள் இணைப்பு திட்டத்தில், மகாநதி – கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – பாலாறு – காவிரி – வைகை – குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டங்களை செயல்படுத்தும்படி, மத்திய அரசையும், மத்திய அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவையும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தேசிய நீர் மேம்பாட்டு முகமை (என்டபிள்யூடிஏ) கடந்த 2004-ம்ஆண்டே தயாரித்து அளித்தது. அதைத் தொடர்ந்து, நதிகள் இணைப்பை 2 கட்டங்களாக செயல்படுத்த தேசிய நீர் மேம்பாட்டு முகமை முடிவெடுத்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு மாநிலங்களின் கருத்தை அறிய அனுப்பி வைக்கப்பட்டது.

இதில், தமிழகத்துக்கு வழங்கஉத்தேசிக்கப்பட்ட 84 டிஎம்சியை200 டிஎம்சியாக உயர்த்தி வழங்கவும், வைகை, குண்டாறு ஆகியஆறுகளுக்கு தண்ணீர் வழங்க கால்வாயை உயர்மட்டத்தில் அமைக்கவும் தமிழக அரசு வலியுறுத்தியது. இந்த கருத்தையே பிரதமர் மோடியை சந்தித்தபோது முதல்வர் ஸ்டாலின் மனுவாக அளித்தார்.

தென் மாநிலங்களின் தண்ணீர் பிரச்சினைக்கு நீண்டகால அடிப்படையில் நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தேசிய நீர் மேம்பாட்டு முகமை சார்பில் நதிநீர் இணைப்பு தொடர்பான அடுத்த கட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் காலை 10.45 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் அமைச்சர் துரைமுருகன், நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதற்காக துரைமுருகன் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது.