மளிகைகடை வியாபாரியிடம் ரூ.7ஆயிரம் லஞ்சம் கேட்ட கோவை உணவு பாதுகாப்பு அதிகாரி கைது..!

கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி ( வயது 78 )அதே பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் லாரி ரோட்டில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றிவரும் வெங்கடேஷ் என்பவர் ஆய்வு செய்தார் .அப்போது கடையின் உரிமம் காலாவதியாக இருப்பது தெரியவந்தது .அதை புதுப்பித்த தர துரைசாமியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ஆனால் அவர் சம்மதம் தெரிவிக்காததால் ரூ10 ஆயிரம் தருமாறு கூறினார். அதற்கும் உடன்படுவதால் இறுதியாக ரூ 7ஆயிரம் கேட்டார். அந்த தொகையை மறுநாள் கொடுப்பதாக  துரைசாமி கூறினார். இதை ஏற்ற வெங்கடேஷ் அங்கிருந்து சென்றார். எனினும் துரைசாமிக்கு லஞ்சம் கொடுக்க மனமில்லை .இதனால் கோவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசுக்கு தகவல் கொடுத்தார் . அவர்களது அறிவுரையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ. 7ஆயிர த்தை பால் கம்பெனி பகுதிக்கு வெங்கடேசை வரவழைத்து துரைசாமி கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த கோவை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் துணை சூப்பிரண்டு திவ்யா தலைமையிலான போலீசார் கையும் களவமாக வெங்கடேசை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர் .அவரை லாரி ரோட்டில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.இதில் வெங்கடேசுக்கு உதவியாக இருந்ததாக பிரதீப் என்பவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..