கோவையில் ஆவின் பாலக உரிமம் பெற்று புகையிலை விற்பனை – பாலகத்திற்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
கோவையில் ஆவின் பாலக உரிமம் பெற்று புகையிலை விற்பனை செய்த பாலகத்திற்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஆவின் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த பாலகங்களில் ஆவின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பால், தயிர், நெய், பால்கோவா, மேலும் டீ விற்பனைக்கு அனுமதியுண்டு, இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஆவின் நிறுவனத்தில் ஆவின் பாலகம் அமைக்க உரிமம் பெற்று மாநகராட்சி பகுதிகளில் பாலகங்களை நடத்தி வரும் நபர்கள், ஆவின் விதிகளை மீறி புகையிலை பொருட்கள், மற்றும் மற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக வந்த தகவலை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அரசு கலைக்கல்லூரி சாலை, அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை மையம் அருகே அமைந்துள்ள ஆவின் பாலகத்தில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் விதிமுறைகளை மீறி புகையிலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்ததால் ஆவின் பாலகத்தை மூடி சீல் வைத்துச் சென்றனர். இதையடுத்து, அவினாசி சாலை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் வளாகத்தில் அமைந்துள்ள பாலகத்தில் விற்பனை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்ற பிற உணவு வகை பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர்.
மேலும், உடனடியாக பால் சார்ந்த பொருட்களை மட்டும் விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தி சென்றனர்.
மேலும், இந்த கடைகளில் ஆய்வு செய்தபோது அதில் உரிமம் காலாவதியானது தெரியவந்தது எனவே அதனையும் புதுப்பிக்கத் தெரிவித்தும் எச்சரித்துச் சென்றனர். இதேபோல் கோவை சுங்கம் பகுதியில் செயல்பட்டு வந்த ஆவின் பாலகமும் மூடப்பட்டது.
Leave a Reply