கோவை கார் வெடிப்பு: கைதான 5 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல் – நீதிமன்றம் உத்தரவு..!

கோவை: உக்கடம் அருகே கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த ஜமேஷ் முபினுடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட 5 பேரையும் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

கடந்த 23 ஆம் தேதி அதிகாலை 4.10 மணியளவில் கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கார் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார்.

தகவலறிந்த டிஜிபி சைலேந்திர பாபு சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த ஜமேஷ் முபின் பொறியியல் பட்டதாரி என்பது தெரியவந்தது.

ஜமேஷ் முபின் ஓட்டிவந்த சென்னை பதிவு எண் கொண்ட கார் பொள்ளாச்சியை சேர்ந்த பிரபாகர் என்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு முன் இந்த கார் 10 பேரிடம் கைமாறியது விசாரணையில் தெரியவந்தது. அந்த காரில் ஆணிகள், பால்ரஸ்கள் இருந்ததாகவும் டிஜிபி கூறி இருக்கிறார்.

இந்த சம்பவம் விபத்தா? அல்லது சதிவேலையா? என்பது குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு பல கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்த நபர் கடந்த 2019 ஆம் ஆண்டு என்.ஐ.ஏ.வால் விசாரணை செய்யப்பட்டவர் என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.

 

ஜமேஷ் முபினின் வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் வெடிமருந்து பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முந்தினம் ஜமேஷ் முபின் மற்றும் அவருடன் சிலர் வீட்டில் இருந்து வெளியேறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. சனிக்கிழமை இரவு அவரோடு இருந்த 4 பேர் உட்பட 7 பேரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஜமேஷ் முபின் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோரை கைது செய்த போலீசார் யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் இன்று வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார்.

கைதான 5 பேரையும் நவம்பர் 8 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரித்த போலீசார் அனுமதி கோரியது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிமன்றம் 5 பேருக்கும் 3 நாள் போலீஸ் காவல் அளித்து உத்தரவு பிறப்பித்தது.