ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பரப்புரை..!

ரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவி கே எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை செய்யவுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு அதற்கு பிப்ரவரி 27ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தென்னரசு உள்ளிட்ட 37 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒவ்வொரு கட்சியிலிருந்தும் பரப்புரையில் ஈடுபடவுள்ள நட்சத்திர பரப்புரையாளர்களின் பட்டியலை அரசியல்கட்சிகள் சார்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் அளிக்கப்பட்டுள்ளது. திமுகவிலிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், கனிமொழி எம்பி, அமைச்சர் உதயநிதி , சிற்றரசு, வெங்கடாச்சலம் உள்ளிட்ட 40 பேர் கொண்ட பட்டியலை தேர்தல் அலுவலரிடம் ஏற்கனவே கொடுத்துள்ளனர்.

இதன் அடிப்படையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவி கே எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை செய்யவுள்ளார். பிப்ரவரி 24 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 19,20 ஆகிய தேதிகளில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபடவுள்ளார்.