கோவையில் கார் பந்தய பயிற்சியில் ஈடுபட்டிருந்த 10 வகுப்பு மாணவன் விபத்தில் உயிரிழப்பு…

ஹரியானா சேர்ந்தவர் கிருஷ்னெண்டு சாட்டர்ஜி (வயது 48). இவரது மகன் நமன் சாட்டர்ஜி (16). இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவருக்கு கார் பந்தயத்தில் மிகவும் ஆர்வம். அதற்காக அங்குள்ள கார் பந்தய பயிற்சி பள்ளியில் கற்று வந்தார். இந்த நிலையில் அவர் கோவை செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள கார் பந்தய பயிற்சி மைதானத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார்.
அங்கு அவர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று வழக்கம் போல பந்தய காரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த கார் திடீரென நமன் சாட்டர்ஜியின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவற்றில் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலை, இடுப்பு மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நமன் சாட்டர்ஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.