கோவை சிறுவாணி ரோட்டில் அரசு பஸ்சை சிறை பிடித்த பொதுமக்கள்..!!

கோவை சிறுவாணி ரோடு தண்ணீர் பந்தல் பிரிவுக்கு அருகே சென்னனூர், கிருஷ்ணாபுரம் மத்திபாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் ,வேலைக்கு செல்லும் பொது மக்கள் பலர் பஸ்களை நம்பியே பயணித்து வருகிறார்கள். ‘இந்த கிராமங்களுக்கு கோவையிலிருந்து 4 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது .ஆனால் கடந்த ஒரு மாதமாக ஒரே ஒரு அரசு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இது குறித்து அந்த பகுதி மக்கள் போக்குவரத்து துறை அதிகாரியிடம் நேரிலும், கடிதம் மூலமாக புகார் தெரிவித்தனர் .ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் சென்னனூர்-மசக்காளிபாளையம் வழித்தடத்தில் இயங்கும் (எண் 4 )அரசு பஸ் நேற்று காலை தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் திரும்பிச் சென்றது .இதை அறிந்த பொதுமக்கள் சிறுவாணி ரோடு- மாதம்பட்டி நான்கு முனை சந்திப்பில் அந்த அரசு பஸ்சை சிறை பிடித்தனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது அறிந்த பேரூர் போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளிக்கப்பட்டது .அதை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.