தேசிய பங்குச் சந்தையில் சித்ராவும்,மர்ம யோகியும் நடத்திய சித்து விளையாட்டு..!

2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை தேசிய பங்குச் சந்தையின் (என்.எஸ்.சி. -NSE) நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் சித்ரா ராமகிருஷ்ணன்.

இவர் தேசிய பங்குச் சந்தையின் தலைமைப் பொறுப்பில் இருந்த போது சிரோன்மணி என்று வர்ணிக்கப்படும் ஒரு ‘மர்ம யோகி’யின் அறிவுரையை ஏற்றே தனது அன்றாட பணிகளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

பங்குச் சந்தையின் முக்கிய முடிவுகள், பணியாளர் நியமனம் மற்றும் சம்பள உயர்வு என்று அனைத்து முடிவுகளையும் இந்த யோகியின் அறிவுரைப்படியே செய்து வந்தது ஈ-மெயில் உள்ளிட்ட தரவுகள் மூலம் தெரியவந்திருக்கிறது.

இந்திய பங்கு பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியம் (செபி – SEBI) நடத்திய விசாரணையில் இந்த விவகாரம் தெரியவந்துள்ளதாக வெள்ளியன்று வெளியான அறிக்கையில் கூறியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக ஹிமாலயத்தில் இருப்பதாகக் கூறப்படும் இந்த யோகியை தனது ஆன்மீக குருவாக ஏற்று செயல்பட்டுவந்த சித்ரா ராமகிருஷ்ணன், பங்குச் சந்தையின் ரகசிய தகவல்களையும் இவருடன் பகிர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சித்ரா ராமகிருஷ்ணன் ஆலோசகராகவும் தேசிய பங்குச் சந்தையின் செயல் அதிகாரியாகவும் இருந்த ஆனந்த் சுப்ரமணியனின் நியமனம் மற்றும் அவருக்கான சம்பள நிர்ணயத்திலும் பெயர் வெளியிடப்படாத இந்த யோகியின் பங்கு இருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

பால்மர் அண்ட் லாஃரி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஆனந்த் சுப்பிரமணியன் 2013 மார்ச் வரை ஆண்டுக்கு ரூ. 15 லட்சம் சம்பளம் பெற்று வந்தார், 2013 ஏப்ரல் மாதம் என்.எஸ்.சி. யின் தலைமை செயல்திட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்ட போது இவரது சம்பளம் ஆண்டுக்கு ரூ. 1.68 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 2014 ம் ஆண்டு ரூ. 2.01 கோடி ஆகவும், 2015 ல் ரூ. 3.33 கோடியாகவும் 2016 ம் ஆண்டு ரூ. 4.21 கோடியாகவும் ஒவ்வோர் ஆண்டும் இவரது சம்பளம் எந்தவித மதிப்பீடும் இல்லாமல் பன்மடங்கு உயர்த்தப்பட்டது.

இந்த சம்பளத்தில் இருந்து ஒரு பெரும் தொகை ஹிமாயலயத்தில் சஞ்சரிக்கும் இந்த மர்ம யோகிக்கு கைமாறியதாக தனது 190 பக்க அறிக்கையில் செபி தெரிவித்துள்ளது.