சீனாவின் தவறான நடவடிக்கை.. விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள்- அறிக்கை தாக்கல்.!!

சீனாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகர பகுதிகளில் தினசரி தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்சைட் ஓவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசின் தவறான கொரோனா மேலாண் நடவடிக்கையால் அந்த நாட்டு சுகாதாரத்துறை விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. கடந்த 2020 -ஆம் ஆண்டிலிருந்து 2022 -ஆம் ஆண்டு இறுதி வரையில் உற்பத்தி மற்றும் சேவை துறை வீழ்ச்சி அடைந்து காணப்படுகிறது என பல்வேறு ஊடக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஊரடங்கு தளர்வு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வரும் நிலையில் மருத்துவமனையில் மருத்துவர்கள் நோயாளிகளை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் சீனாவில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது என அரசு அறிவித்துள்ளது. ஆனால் தொற்று பாதித்தோ அல்லது தொற்று பரவல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் காரணமாக குழந்தைகள் யாரும் பள்ளிக்கு வரவில்லை.

மேலும் சீனாவில் உள்ள 80 சதவீத ஐரோப்பிய நிறுவனங்கள் வருங்கால வருவாய் கணிப்புகளை குறைத்து அறிவித்துள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு ஆய்வின்படி 2022 டிசம்பர் 23-ஆம் தேதியிலிருந்து 2023 ஜனவரி 3-ஆம் தேதி வரையில் 31,585 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்க கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.