பொது வெளியில் வராத சீன பாதுகாப்புத்துறை அமைச்சர்… வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறாரா..?

சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லி ஷாங்ஃபு கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பொது வெளியில் காணப்படவில்லை.

இதனால், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறாரா எனக் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

ஜப்பானுக்கான அமெரிக்க தூதர் ரஹ்ம் இமானுவேல்  வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ஷேக்ஸ்பியரின் வாசகத்தை மேற்கோள் காட்டி, “சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லி ஷாங்ஃபுவை கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாகப் பார்க்க முடியவில்லை. ஏற்கெனவே திட்டமிட்டபடி வியட்நாம் நாட்டுக்கும் செல்லவில்லை. இதற்கு அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதே காரணமா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில், மத்திய ராணுவ கமிஷன் கூட்டம்  நடந்தது. இது மிக முக்கியக் கூட்டமாகக் கருதப்படுகிறது. இதில், ராணுவ அமைச்சர் லி ஷாங்ஃபு பங்கேற்கவில்லை. கூட்டம் தொடர்பான வீடியோ வெளியான நிலையில், அவர் அதில் தென்படவில்லை. அதோடு அரசுத் தரப்பிலிருந்தும் இதற்கான எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. லி ஷாங்ஃபு, இது போன்ற முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்காதது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே, கடந்த செப்., 7, 8-ம் தேதிகளில் வியட்நாம் ராணுவ உயரதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் லி ஷாங்ஃபு கலந்துகொள்ளவில்லை. அவர் இந்த மாதத் தொடக்கத்திலிருந்தே எந்தப் பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, ராணுவ அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக லி ஷாங்ஃபு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. கடைசியாக அவர் ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதியன்று ஆப்பிரிக்க நாடுகளுடனான பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் உரையாற்றியிருந்தார். இதற்கிடையே, `லி ஷாங்ஃபு விசாரணைக்கு உட்பட்டிருக்கலாம் என அமெரிக்க அரசு நம்புகிறது’ என, ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஏற்கெனவே, இதேபோலத்தான் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கின் காங்  தொடர்ந்து சில வாரங்களாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். அதற்கான விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து கின் காங் பதவியிலிருந்து அகற்றப்பட்டு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாயின.பின்னர் கின் காங்குக்கு பதிலாக கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகார ஆணையத்தின் இயக்குநராக இருந்த வாங் யீ.