இந்தியா மீது சீனா சைபர் கிரைம் தாக்குதல் … மின் விநியோகத்தை ஹேக்கர்கள் மூலம் கட்டுப்படுத்த முயற்சி…

இந்தியாவின் மின் விநியோகத்தை ஹேக்கர்கள் மூலம் கட்டுப்படுத்த சீனா முயற்சி மேற்கொள்வதாக தனியார் நிறுவனம் ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சதி வேலைக்காக நிபுணத்துவம் பெற்ற ஹேக்கர்களுக்கு பெரிய அளவில் சீனா நிதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தனியார் உளவு நிறுவனமான ரிக்கார்டட் ஃபியூச்சர் (Recorded Future) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

கடந்த சில மாதங்களாக நாங்கள் கண்காணித்த வகையில், இந்தியாவில் 7 மாநில மின் விநியோகத்தை குறிவைத்து, நெட்வொர்க் கட்டளைகள் சம்பந்தம் இல்லாமல் வந்துள்ளன. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டதில் இந்தியா – சீனா எல்லை பிரச்னை நீடித்து வரும் லடாக்கில் நெட்வொர்க் கட்டளை சிக்னல்கள் குவிவதை கண்டுபிடிக்க முடிந்தது.

லடாக்கில் உள்ள பவர் கிரிட்டை (மின் விநியோக தொகுப்பை)ஹேக் செய்து அதன் மூலம் முக்கிய தகவல்களை சீனா திருடியிருக்கலாம் என்று கருதுகிறோம்

இந்தியாவின் மின் கிரிட்டை தவிர்த்து, தேசிய அவசர நிலை மீட்பு அமைப்பு, பன்னாட்டு லாஜிஸ்டிக் நிறுவனங்களுடைய இந்திய அமைப்பு ஆகியவற்றையும் இதே ஹேக்கர் குழு ஹேக் செய்திருப்பதையும் நாங்கள் கண்டுபிடித்தோம்.

இந்த தகவல்களை பொது வெளியில் வெளியிடுவற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அரசு துறைகளில் இதுகுறித்து தகவல் அளித்திருக்கிறோம்.

இந்தியாவின் உள் கட்டமைப்பு தொடர்பான தகவல்களை திருடுவதற்கு சீனா திட்டமிட்டு முயற்சி செய்துள்ளது. இதற்காக சிறந்த ஹேக்கர்களை பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு பெரும் தொகையை சீனா வழங்கியுள்ளது.

சீனா நடத்திய இந்த சைபர் தாக்குதல் நீண்ட கால அடிப்படையில் நடத்தப்பட்டிருப்பதை புரிந்து கொள்ளலாம். இந்தியாவிடம் திருடப்பட்ட தகவல்கள் எதிர்காலத்தில் சீனாவால் பயன்படுத்தப்படும் என்று கணித்துள்ளோம்.

இவ்வாறு ரிக்கார்டட் ஃப்யூச்சர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.