தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர், கடந்த 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், இச்சட்டமன்ற கூட்டத்தொடரை மூன்று நாட்கள் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் முடிவிற்கு எதிராகத் தமிழக அரசு சார்பில் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது, “இந்த விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வர் விஜய், திருத்தங்களுடன் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.இருப்பினும், இந்தத் தீர்மானம் குறித்து நேற்று அதிருப்தி வெளியிட்ட அதிமுக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளன.
இதற்கிடையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் அரசு சார்பில் விளக்கம் மட்டுமே அளிக்கப்பட்டது.தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தொடர் விவாதத்தின் போது, தேசிய கீதம் இரண்டு முறை ஒழிக்கப்பட்டதாகக் கூறி சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மின்வெட்டுப் பிரச்சனை மற்றும் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை ஒளிபரப்பு செய்வதில் உள்ள குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காரசாரமாகப் பேசினார்.
இந்நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இன்று அதற்குத் தமிழக முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்க உள்ளார். இதற்காக இன்றைய சட்டசபை கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கியுள்ளது. மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது இதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்களின் திருத்தங்களை அவை ஏற்கும் நிகழ்வு நடைற்றது. இதைத்தொடர்ந்து தற்போது முதல்வர் விஜய் உரை நிகழ்த்த தொடங்கி உள்ளார். தவெக அரசை தேர்ந்தெடுத்த தமிக மக்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் விஜய் தனது அரசியல் பயணம் குறித்து பேச தொடங்கினார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் விஜய் பேசினார் .நாம் ஏதோ ஷூட்டிங்கில் இருந்து நேராக வந்து முதலமைச்சர் ஆனது போல் சித்தரிக்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் ஆசைப்படும் மொழியில் சொல்கிறோம். அது வெறும் ரீல் தான் ரியல் இல்லை என்றார்.எதிர்த்து பேசினால் தான் எதிர்க்கட்சி என்று நிரூபிக்க முடியும் என நினைத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு வணக்கமும் நன்றியும் என ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தார்.
பெரியார் சொன்னதிலே ஏற்புடையதை மட்டும் எடுத்துக் கொண்டோம். அவர் கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடில்லை என்று அறிவித்தோம். நமக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்று அறிவித்தோம். யாருடைய நம்பிக்கைக்கும் நாம் எதிரானவர்கள் இல்லை என்று அறிவித்தோம். பெண் கல்வி, சமூக நீதி என இப்படி பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தோம். அண்ணல் அம்பேத்கரின் சமவாய்ப்பு, சம நீதி, சமத்துவத்தை பின்பற்றுவோம் என்று அறிவித்தோம். பெருந்தலைவர் காமராஜரின் மதச்சார்பின்மையை ஏற்றுக் கொண்டதுடன் அவருடைய நேர்மையான நிர்வாகத்தை ஒரு கொள்கையாக ஏற்றுக் கொண்டதாக நிரூபித்தோம் என்றார்.
ரசிகர் மன்றமாக இருக்கும்போது மக்களுக்கு துணையாக இருந்தோம். 1990-களில் ரசிகர் மன்றமாக இருந்த போது மக்களுக்கு துணையாக நிற்க ஆரம்பித்தோம். அதன்பின்னர் நற்பணி மன்றமாகவும், விஜய் மக்கள் இயக்கமாகவும் மாறி மக்களோடு மக்களாக நின்று கொண்டிருந்தோம்.
2008-இல் ஈழத்தமிழர் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் செய்தோம்.போர் முடிவுக்கு வரவேண்டும், ஈழத் தமிழருக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டும் என்று அன்றே கோரிக்கை வைத்தோம். கல்வி, கொரோனா, வெள்ளம் போன்ற காலங்களில் துணையாக இருந்தோம் என்றார்.
2009 மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்தோம்
திரைப்படங்களில் சமூகநீதி ஊழல் எதிர்ப்பு உள்ளிட்டவர்களை கூறினோம்
2011-இல் மீனவர்கள் ஆதரவாக ஒரு பொதுக்கூட்டம் நடத்தினோம்
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தோம்
ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு நேரடியாக சென்று என்னுடைய ஆதரவை தெரிவித்தோம்
கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்கினோம்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக குரல்
என பல கட்ட போராட்டங்களுக்கு பிறகே தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்தோம் என்று முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசினார்.







