கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யவே முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்.!

ஞ்சாவூர்: ‘2 ஆண்டு கால ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யவே முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார்,” என அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது: எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் இறைவன் சக்தி பெற்று, அதிமுகவை காத்து வருகின்றனர். யார் கெடுதல் நினைத்தாலும் அவர்கள் தான் கெட்டுப் போவர். அதிமுகவை தீய சக்தி திமுகவோடு இணைந்து அழிக்க நினைப்போர், அழிந்து போவர். அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் தான் நம் முதல் எதிரி.

அதிமுகவை எந்தக் கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது.நாம் கோவிலாக நினைத்த கட்சி தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். அ.தி.மு.க., தனிப்பட்ட ஒருவருக்கு சொந்தமான கட்சி அல்ல. ஒரத்தநாடு பகுதி என்று சொன்னாலே, துரோகி இருக்கும் இடம் என்பது உங்களுக்கு தெரியும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்த போதே கட்சியில் பல துரோகிகள் இருந்தனர்.

அவர்கள் அடியோடு அழிந்து போன வரலாறு உண்டு. கடந்த 2016ல் அ.தி.மு.க., ஆட்சியைகவிழ்க்க, சட்டசபையில் எதிர்த்து ஓட்டு போட்டனர். அப்படி போட்டவரையும் பிற்காலத்தில் மன்னித்தோம். அவருக்கும் உச்ச பதவி கொடுத்துஆதரித்தோம்.

அதன்பின்னும் அவர் திருந்தவில்லை; நயவஞ்சக புத்தியோடு செயல்பட்டார். அதனாலேயே அ.தி.மு.க., கரை வேட்டி, கொடி கட்ட முடியாத நிலைக்கு அவரும், அவரைச் சார்ந்தோரும் தள்ளப்பட்டுள்ளனர். தி.மு.க., கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை தேர்தல் நேரத்தில் அறிவித்து, ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு, எட்டு மாதங்களாகிறது.

இதுவரை எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.தமிழகத்தின் பொம்மை முதல்வராக இருக்கும் ஸ்டாலின், 100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். மக்களை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறார். யாரையும் ஏமாற்ற முடியாது. தி.மு.க., குடும்ப கட்சி.

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஆட்சிக்கு, அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பது மட்டும் தான் ஒரே குறிக்கோள்; மக்களை பற்றி ஒரு நாளும் கவலை கிடையாது.தி.மு.க., ஒரு கார்ப்பரேட்கம்பெனி. ஆட்சியை வைத்து எவ்வளவு ஊழல் செய்ய முடியும்; அதன் வாயிலாக எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதையே தி.மு.க.,வினர் நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர். இரண்டு ஆண்டு கால ஆட்சியில், கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார்.விவசாயிகளை தி.மு.க.,எதிரிகளை போல பார்க்கிறது. வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க.,வுக்கு, தேர்தலில் சரியான மரண அடி கொடுக்கப்பட வேண்டும். தி.மு.க.,வை வீழ்த்த, வரும் லோக்சபா தேர்தல் அடித்தளமாக அமையட்டும். 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாகவும் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.