நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம்… இன்று துவங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ என்ற திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் இன்று காலை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நிகழ்வில் முன்னிலை வகிப்பார்.

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. முக்கியமாக பெண் கல்வியை முன்னேற்றும் விதமாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஆசிரியர் தினத்தை தமிழ்நாட்டில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். அதேபோல் அரசு பள்ளிகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லவும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதை முன்னிட்டே 6 முதல் 12-ம் வகுப்பு படித்து வரும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. அதன்படி ‘கலைத் திருவிழா’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ என்ற திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இன்று காலை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் மூலம் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் என்ற முறையில் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் பேசினார். அப்போது, ஒவ்வொரு பள்ளியில் படித்து தற்போது நல்ல நிலையில் இருப்பவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு நன்றிக்கடனுடன் இருக்க வேண்டும். தாங்கள் படித்த பள்ளிக்கு சேவை செய்ய வேண்டும்.

நம்முடைய பள்ளிகள்தான் நம்மை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு உதவி செய்ய வேண்டும். தங்கள் பள்ளியை முன்னேற்ற உதவி செய்ய வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு முன்னெடுப்பை எடுத்து உள்ளோம். ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ என்ற பெயரில் இந்த முன்னெடுப்பை தொடங்க உள்ளேன் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். இந்த திட்டம்தான் இன்று காலை தொடங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்திற்காக ஒரு இணையதளம் உருவாக்கப்பட உள்ளது. இந்த இணைய தளத்தை வைத்து தமிழ்நாட்டில் இருக்கும் எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதி உதவி செய்ய முடியும். அரசு பள்ளியில் படித்து உயர்ந்த நிலையில் இருப்பவர்கள், அரசு பள்ளியில் படித்து பெரிய பதவிகளில் இருப்பவர்கள் ஆகியோர்கள் தங்களின் பள்ளிக்கு நிதி உதவி அளிக்க முடியும். இந்த பணத்தை வைத்து பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுதல், சுற்றுசுவர் அமைத்தல், விளையாட்டு சாதனங்கள் வாங்குதல், தேவையான பொருட்களை வாங்குதல், புனரமைப்பு பணிகளை செய்தல் போன்ற திட்டங்களை நிறைவேற்ற முடியும்.