மதுரை: செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படம் இடம் பெற வேண்டும்.
இருவரின் புகைப்படங்கள் இடம் பெற்ற விளம்பரங்களை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்களை சேர்க்க உத்தரவிடக் கோரி சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விளம்பரத்துக்கு பொதுமக்களின் வரிப்பணம் அதிக அளவில் செலவிடப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியாகும். நாட்டுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும்.
ஆனால், இதை அரசியல் ஆதாயம் தேடும் நிகழ்வாக ஆளும் கட்சி பயன்படுத்தி வருகிறது. போட்டி தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்களை தவிர்த்து, தமிழக முதல்வரின் புகைப்படம் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம். எனவே, ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்களை சேர்க்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. தமிழக அரசு தரப்பில், ‘குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்ததால் அவரது புகைப்படம் இடம்பெறவில்லை. பிரதமரின் வருகை ஜூலை 22-ல் தான் உறுதியானது. இதனால், முன் விளம்பரங்களில் இருவரின் புகைப்படங்கள் இடம் பெறவில்லை. இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
சர்வதேச அளவில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்கள் இடம்பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு வழக்கில் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக அரசின் விளக்கத்தை ஏற்க முடியாது.
குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த பிறகு வெளியான விளம்பரங்களிலும் குடியரசுத் தலைவரின் புகைப்படம் இடம் பெறவில்லை. தொடக்க விழாவுக்கு பிரதமர் வராவிட்டாலும் விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படம் இடம் பெற வேண்டும். நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சர்வதேச அளவிலான விழாவின் முக்கியத்துவம் கருதி பிரதமர் தொடக்க விழாவில் பங்கேற்றுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படம் இடம்பெறவில்லை. தொடக்க விழா விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படம் உள்ளது. ஆனால், குடியரசுத் தலைவரின் புகைப்படம் இல்லை. எனவே, செஸ் ஒலிம்பியாட் தொடர்பான அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் மற்றும் அனைத்து விளம்பரங்களிலும் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்கள் இடம் பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல தமிழக அரசு சர்வதேச நிகழ்வுகளை நடத்தினால், முக்கிய விருந்தினர்களின் புகைப்படங்கள், பெயர்களை அச்சிடுவதில் உச்ச நீதிமன்ற (காமன்காஸ் வழக்கு) உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் செய்ததற்காக தமிழக அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் உணர்வுகளை மதிப்பதும், சர்வதேச நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முத்திரை பதிப்பதும்தான் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்களின் சிறந்த மன்னிப்பாக இருக்கும்.
தமிழக முதல்வர் தவிர்த்து குடியரசுத் தலைவர், பிரதமர் புகைப்படத்துடன் வைக்கப்படும் விளம்பரங்கள் சேதப்படுத்தப்படாமல் இருப்பதை மாவட்ட நிர்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Leave a Reply