கோவையில் நடத்திய அதிரடி ரெய்டு: கந்து வட்டி வசூலித்த 18 பேர் கைது- ரூ. 1.25 கோடி, 48 ஏ.டி.எம். கார்டு, 379 சொத்து ஆவணங்கள் பறிமுதல்..!!

கோவை;கோவை மாவட்ட போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் கந்து வட்டி வசூலித்த, 18 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1.25 கோடி ரூபாய், 379 சொத்து ஆவணங்கள், வெற்றுக் காசோலைகள், 48 ஏ.டி.எம்., கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.கோவை மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் கந்து வட்டி கொடுமை அதிகமாக இருப்பதாக, எஸ்.பி., பத்ரி நாராயணனுக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில், கந்து வட்டி தொழிலில் இருப்பவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன.அவர்களது வீடுகளில் அதிரடி ‘ரெய்டு’ நடத்த முடிவு செய்யப்பட்டு, சிறப்பு போலீஸ் படையினர் தயார் செய்யப்பட்டனர். நேற்று காலை 6:00 மணிக்கு மாவட்டம் முழுவதும், 16 இடங்களில், ஒரே நேரத்தில் ரெய்டு தொடங்கியது.இதில், மதுக்கரை அடுத்த திருமலையம்பாளையத்தை சேர்ந்த நடராஜன், 60, என்பவர் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், ஒரு கோடியே 12 லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாயை கைப்பற்றினர். ஏராளமான சொத்து ஆவணங்கள், வெற்றுக் காசோலைகள் பிடிபட்டன.நடராஜன் கைது செய்யப்பட்டார்.

பி.கே.புதுாரை சேர்ந்த சண்முகம் கொடுத்த புகார் அடிப்படையில், இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் நடந்த சோதனை முடிவில், செல்வி, 50, நடராஜன், 60, வேலுசாமி, 68, சவுந்தரராஜன், 55, உதயகுமார், 55, இளங்கோ, 40, சரவணன், 42, சுபாஷ், 34, நாகராஜ், 34, மகேந்திரன், 55, திருச்சிற்றம்பலம் குமார், 50, சதீஷ் குமார், 44, மாணிக்கம், 44, ராமர், 55, மாடசாமி, 54, செல்வராஜ், 64, ஜனார்த்தனன், 57, ரமேஷ், 42, மணியன், 56, ஆகிய 19 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. வேலுசாமி தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.சொத்து ஆவணங்கள் பறிமுதல் ரெய்டு நடந்த வீடுகளில் இருந்து மொத்தம் 1.25 கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்புடைய, 379 சொத்து ஆவணங்கள், 79 புரோ நோட்டுகள், 127 வெற்றுக் காசோலைகள், 48 ஏ.டி.எம்., கார்டுகள், 18 வங்கி பாஸ் புத்தகங்கள், 54 கையெழுத்திடப்பட்ட வெற்று காகிதங்கள், 211 வாகனங்களின் ஆர்.சி., புத்தகங்கள், 35 பைனான்ஸ் கணக்கு நோட்டுகள், ஏழு ஆதார் கார்டுகள், மூன்று பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டன.எஸ்.பி., தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ரெய்டில், 6 டி.எஸ்.பி.,க்கள், 20 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.’யாராவது கந்து வட்டி வசூலிப்பது தெரிய வந்தாலோ, கந்து வட்டிக்காக சொத்து ஆவணங்களை வாங்கி வைத்துக் கொண்டு துன்புறுத்தினாலோ, எஸ்.பி., அலுவலகத்தில் நேரில் வந்து புகார் அளிக்கலாம்’ என்று, கோவை ரூரல் எஸ்.பி., பத்ரிநாராயணன் தெரிவித்தார்.ஆதார் கார்டும் அடமானம்ரேஷன் கார்டுகளை அடமானம் வைத்து கடன் வாங்கும் வழக்கம், ஏழை மக்களிடம் பல ஆண்டுக்கு முன் இருந்தது. ஸ்மார்ட் கார்டு மற்றும் பயோ மெட்ரிக் முறை வந்தபிறகு, அதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்டன. இந்நிலையில் ஒரிஜினல் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் ஆகியவை, கந்து வட்டி கும்பலால் கடனுக்கு ஈடாக பெறப்பட்டிருப்பது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.