சிவகாசியில் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்க கோரிய வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி..!

சிவகாசி மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சிவகாசியில் உள்ள 48 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலின் போது ஆளும்கட்சி அதிகாரிகளையும், போலீசாரையும் மிரட்டி வாக்குகளை பதிவு செய்ய வைத்துள்ளதாகவும், இதனால், வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க மத்திய அரசு தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும் என திருத்தங்கல் நகராட்சி அதிமுக செயலாளர் பொன்.சக்திவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு அவசர வழக்காக தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எந்த அதிகாரிகளை யார் மிரட்டினார்கள் என்ற விவரம் மனுவில் இல்லை. அதுவுமில்லாமல் எந்த அதிகாரியும் தாங்கள் தாக்கப்பட்டதாக புகார் அளிக்கவில்லை. மனுதாரர் தனது மனுவில் விளக்கமாக எதுவும் குறிப்பிடாததால் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.