சந்திரயான் 3 இறுதி கட்ட பணி நிறைவு.!!

ந்திரயான் 3 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதையை உயர்த்தும் இறுதி கட்ட பணி நிறைவடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்றான நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்கு, கடந்த 14 ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணிற்கு ஏவப்பட்டது. குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தொலைவும் அதிகபட்சம் 36 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவும் கொண்ட புவி நீள் வட்ட சுற்றுப்பாதையில், சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயானை நிலவிற்கு அருகே கொண்டு செல்லும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதில், சந்திரயானின் புவி சுற்றுவட்டப்பாதையை உயர்த்தும் 5 கட்டங்களும் அடுத்தடுத்து வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன. இதன் மூலம், தற்போது சந்திரயான்-3 விண்கலம், பூமியில் இருந்து குறைந்தபட்சம் 236 கிலோ மீட்டர் தொலைவுக்கும், அதிகபட்சம் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 609 கிலோ மீட்டர் தொலைவிற்குமாக சுற்றி புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் வலம் வந்து கொண்டிருக்கும்.

இவ்வாறு பூமிக்கு அருகிலும் பின்னர் சற்று தூரம் விலகியும் புவியின் ஈர்ப்பு விசை பிடியில் சுற்றி வரும் சந்திரயானை, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் தள்ளுவதே விஞ்ஞானிகளின் அடுத்த கட்ட பணியாகும். அதாவது, முதலில் பூமிக்கும் நிலவிற்கும் இடையிலான சமஈர்ப்பு விசை புள்ளியில் சந்திரயான் விண்கலம் அனுப்பப்படும். இதனை வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நள்ளிரவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொள்ள உள்ளனர்.

இதன் பிறகு, சந்திரயான் மீண்டும் புவி ஈர்ப்பு விசைக்குள் வராமல் இருக்கும் வகையில், கூடுதல் அழுத்தத்தோடு, நிலவின் ஈர்ப்பு விசை வட்டத்திற்குள் விண்கலம் அனுப்பப்படும்.பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக சந்திரயான் விண்கலம் நிலவை சுற்ற வைக்கப்படும். இதனை தொடர்ந்து விண்கலத்தில் உள்ள உந்து கலத்தில் இருந்து தரையிறங்கி கலம், தனியாக பிரிக்கப்பட்டு, நீள் வட்டப் பாதையில் செலுத்தப்படும். இதன் பிறகே, சந்திரயான் -3 வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்படும்.

ஆக, இதுவரையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்ட பணிகள் அனைத்துமே டிரைலர் போன்றது தான். அடுத்தடுத்து அவர்கள் செய்ய உள்ள பணிகளே, சந்திரயான் திட்டத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்க உள்ளன. விஞ்ஞானிகள் வகுத்த மேப்பின் அடிப்படையில் சந்திரயான்-3 செல்லும் பட்சத்தில், நிலவில் அது தரையிறங்குவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்று நம்பப்படுகிறது.