காவிரி நீர் மேலாண்மை சுதந்திரமானவை.. எங்களை எந்த மாநிலமும் நிர்பந்திக்க முடியாது..நாங்க விவாதிப்போம்-ஆணையர் ஹல்தர் தகவல் .!!!

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு மேகதாது அணை குறித்து விவாதிக்க முழு அதிகாரம் உள்ளது என்று, ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.

வரும் 23-ந் தேதி கூட்டத்தில் மேகதாது அணை திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று, காவேரி நீர் மேலாண்மை ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பு என்றும் ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க அதிமுக, பாமக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழக அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், மேகதாது அணைத் திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று தஞ்சை கல்லணை பகுதியில் உள்ள வெண்ணாறு, கொள்ளிடம் அணைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது, “வருகின்ற 23 ஆம் தேதி நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து நிச்சயம் விவாதிப்போம். விவாதம் செய்வதற்கு காவேரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது.

‘காவேரி நீர் மேலாண்மை ஆணையம்’ சுதந்திரமான அமைப்பு. இந்த அமைப்பு எந்த மாநிலத்திற்கும் ஆதரவாக செயல்படாது. எங்களை எந்த மாநிலமும் நிர்பந்திக்க முடியாது. அணை விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதம் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.