தமிழக பாஜகவில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக ஒரேயொரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக கட்சி தலைமையிடம் பேசுவதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெல்லிக்கு கிளம்பி சென்றார். இதனையடுத்து தற்போதைய மாநில தலைவரான நயினார் நாகேந்திரனையும் டெல்லிக்கு வரக்கூறி அழைப்பு விடுக்கப்பட்டது.
அண்ணாமலையின் ராஜினாமா விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு அவர் டெல்லியில் அழைக்கப்பட்டு இருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனுக்கு புதிய பொறுப்பு வழங்குவதற்கு பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி அவருக்கு ஒன்றிய இணையமைச்சர் வழங்கும் முடிவில் பாஜக தலைமை இருப்பதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து பேசுவதற்கு அவர் டெல்லிக்கு அழைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் கடந்த முறை சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இதனையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தொகுதி மாறி போட்டியிட்டார் நயினார் நாகேந்திரன். ஆனால் தோல்வியை தழுவினார். அதிமுகவில் பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரேயொரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெற்று இருந்தது.
நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன் உளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் தோல்வியை தழுவினார்கள். இது தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் நயினார் நாகேந்திரனுக்கு ஒன்றிய இணையமைச்சர் பதவி வழங்குவதற்கு பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது அரசியல் களத்தில் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.
இதனிடையில் நயினார் நாகேந்திரனுக்கு இணையமைச்சர் பதவி கொடுப்பதால், அவர் மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுகிறாரா என்ற சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக பாஜக படு தோல்வியை சந்தித்துள்ள நிலையில், கட்சியில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளது. குறிப்பாக இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளது.இதற்கிடையில் முன்னாள் பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார். இது சம்பந்தமாக தனது ராஜினாமா கடிதத்தை நேற்றைய தினம் நிதின் நபினிடம் வழங்கினார். கட்சியில் தான் சீனியர்களால் ஓரம்கட்டப்பட்டது குறித்தும், சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்விக்கான காரணம் பற்றியும் அவர் அந்த கடித்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் நேற்றைய தினம் டெல்லியில் வைத்து சந்தித்து பேசினார் அண்ணாமலை.
இந்நிலையில் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் பாஜகவில் இருந்து விலகும் தன்னுடைய முடிவில் அண்ணாமலை உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அவர் தனிக்கட்சி துவங்கும் முடிவிலும் உள்ளார். இதனிடையில் அண்ணாமலை பாகவில் இருந்தும் விலகும் முடிவினை, அவரது ஆதரவாளர்கள் வரவேற்று ஆங்காங்கே பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.







