23ம் தேதி நடக்கவுள்ள பொதுக்குழுவை தள்ளி வைங்க… இபிஎஸ்க்கு ஓபிஎஸ் கடிதம்..!!

சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டும் எனவும், கட்சியில் அசாதாரண சூழல் நிலவுவதால் 23ம் தேதி நடக்கவுள்ள பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.சென்னையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இல்லத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: எம்.ஜி.ஆர் காலம் முதல் கடந்தமுறை நடைபெற்ற பொதுக்குழு வரை நிறைவேற்றப்பட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை. இது குறித்த கடிதத்தை பழனிசாமிக்கும் அனுப்பியுள்ளோம். கடிதத்தில், பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என நீங்கள் (பழனிசாமி) தெரிவித்தீர்கள்.ஆனால், ஜெயலலிதா அதே மண்டபத்தில் பொதுக்குழு கூட்டியபோதெல்லாம் சிறப்பு அழைப்பாளர்களை அழைத்திருக்கிறார் என முன்னாள் நிர்வாகிகள் சிலர் எங்களிடம் ஆதங்கமாக கூறியுள்ளனர். பொதுக்குழுவில் அதிமுக முன்னோடிகளை அழைப்பதே கட்சியின் மரபு. அதேபோல், 23ம் தேதிக்கான நிகழ்ச்சி நிரல் கிடைக்கப்பெறவில்லை என செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

மேலும், முன்னறிவிப்பு இன்றி 14ம் தேதி நடந்த கூட்டத்தில் அதிமுக ஒற்றை தலைமை குறித்து பேசப்பட்டது.இதனால் கட்சியில் அசாதாரண சூழல் நிலவுகிறது. சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால், 23ம் தேதி நடைபெற உள்ள செயற்குழு, பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும். அடுத்த கூட்டத்திற்கான இடம், நாள் மற்றும் நேரத்தை இருவரும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என கடிதத்தில் குறிப்பிட்டு பழனிசாமிக்கு நேற்றே அனுப்பியுள்ளோம். அதனை இப்போது வெளியிடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.திட்டமிட்டப்படி நடைபெறும் இந்த நிலையில் பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை பழனிசாமி தரப்பினர் ஏற்க மறுத்துள்ளனர். அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறும் எனவும், பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருவதாகவும், வைத்தியலிங்கம் கூறியது அவரது சொந்த கருத்து எனவும் இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.போலீசில் புகார் அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க கோரி ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்திய நிலையில், பொதுக்குழுவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதால், அக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டாம் என ஓபிஎஸ் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.