கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட 846 பாஜக வினர் மீது வழக்குபதிவு..!

கோவை: ஆவின் பால் பாக்கெட்டின் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
அதன்படி கோவையில் ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், பாப்பநாயக்கன் பாளையம், சாய்பாபா காலனியை அடுத்த வெங்கிட்டாபுரம், ரத்தினபுரி, ராமநாதபுரம், செல்வபுரம், சுந்தராபுரம், குனியமுத்தூர், சிங்காநல்லூர், பீளமேடு, துடியலூர் உள்பட 25 இடங்களில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த பூலுவபட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமை தாங்கினார். உக்கடம் செட்டி வீதி பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் தலைமை தாங்கினார்.

இதில் ஊடகப்பிரிவு மாநில துணைத்தலைவர், மாவட்ட துணைத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட முழுவதும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜனதா கட்சியினர் ஆவின் பால் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த நிலையில் மாநகரில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் உரிய அனுமதியின்றி கூடியதாவகவும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் ஆர்.எஸ்.புரம், காட்டூர், ரேஸ்கோர்ஸ், சாய் காலனி, ராமநாதபுரம் உள்பட போலீஸ் நிலையங்கனில் பெண்கள் உள்பட 846 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று புறநகர் போலீசார் அந்ததந்த போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.