இன்னும் 4 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில்… காதலியை தாக்கிய காதலன் மீது இளம்பெண் புகார்..!

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவரது தந்தை இறந்து விட்டார். இந்நிலையில், இளம்பெண்ணுக்கு கோவையை சேர்ந்த ஹரிபிரசாத்(24) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறி கடந்த ஓராண்டாக இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இரு வீட்டாரின் குடும்பத்தாருக்கும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க முன்வந்து வருகிற 20-ந் தேதி திருமணத்துக்கு நிச்சயம் செய்ததாக தெரிகிறது. அதன் பின்னர் காதலர்களுக்கிடையே சிறு, சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இளம்பெண்ணின் தாயாருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை அழைத்து கொண்டு இளம்பெண் நவ இந்தியாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஹரிபிரசாத், இளம்பெண்ணிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஹரிபிரசாத் தகாத வார்த்தைகளால் திட்டி இளம்பெண்ணை தாக்கினார். பலத்த காயமடைந்த அந்த இளம் பெண் இது குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் ஹரிபிரசாத் மீது தாக்குதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.