சூலூரில் 2 போலி டாக்டர்கள் மீது வழக்கு..!

கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள மையம்பட்டி பகுதியில் மருத்துவமனை நடத்தி போலியாக மருத்துவம் பார்ப்பதாக சோமனூர் சமூக ஆர்வலர் தனிஷ் காதாரத் துறையில் புகார் செய்தார். அதன் பேரில் சுகாதார ஆய்வாளர் சுகந்த் அங்கு சிகிச்சை பெறுவது போல சென்றார். உடனே அங்கிருந்த குமார் மற்றும் திவ்யா ஆகியோர் அவருக்கு சிகிச்சை அளித்து மருந்து சீட்டில் மருந்துகளை எழுதிக் கொடுத்தனர் . இதை அறிந்த சுகாதாரத் துறை ஆய்வாளர் மீரா, டாக்டர் வெங்கடேசன், டாக்டர் உமர் பாரூக் ஆகியோர் அந்த மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டனர். இதில் அந்த மருத்துவமனை தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்தும் சட்டம் 1997-ன் படி பதிவு செய்யப்படவில்லை என்பதும், மருத்துவமனையில் வெளியே இருந்த விளம்பர பலகையில் டாக்டர் பெயர் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த எண் போன்றவை இல்லை என்பது தெரிய வந்தது. மேலும் சிகிச்சை அளித்தவர்கள் செவிலியர் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என்பதும் தெரிய வந்தது. மேலும் அங்கு கலாவதியான மருந்துகள் வைத்திருந்தது கண்டுபிடித்து  பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து சுகாதாரத் துறை ஆய்வாளர் மீரா சூலூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலி டாக்டர்கள் குமார், திவ்யா ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது..