நாய் குறுக்கே வந்ததால் மின்கம்பம் மீது மோதிய கார்-அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தந்தை, மகன்..!!

பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டாம்பட்டியை சேர்ந்தவர் மயில்சாமி(வயது 65). இவர் தனது மகனுடன் நேற்று நெகமம் அருகே கக்கடவில் உள்ள தனது தோட்டத்துக்கு காரில் சென்றார். பின்னர் அங்கு பணிகளை முடித்துவிட்டு, வீடு திரும்பி கொண்டு இருந்தனர். காரை மயில்சாமி ஓட்டினார். கக்கடவில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்காக நெகமம் அருகே கோவில்பாளையம் ரோட்டில் வந்து கொண்டு இருந்தபோது, காணியாலாம்பாளையம் பிரிவு அருகே திடீரென நாய் குறுக்கே ஓடி வந்தது. உடனே கார் மயில்சாமியின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மின்கம்பம் மீது மோதியது. இந்த விபத்தில் மின்கம்பம் இரண்டு துண்டாக முறிந்தது. ஆனால் கீழே விழவில்லை. மேலும் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. ஆனால் காரில் இருந்த தந்தை, மகன் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து மின்வார வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து கார் அப்புறப்படுத்தப்பட்டு, மின்கம்பம் மாற்றப்பட்டது. இந்த விபத்து குறித்து நெகமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.