புதுடெல்லி: தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரியும் தபால் துறை ஊழியர் ஒருவர் ரூ.16.59 லட்சம் அளவுக்கு ஊழல் செய்ததாக புகார் கூறப்பட்டது.
அவரை பணிநீக்கம் செய்து அஞ்சல் துறை ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் அந்த ஊழியர் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், அவருக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அஞ்சல் துறை முறையீடு செய்த போது, சம்பந்தப்பட்ட தபால்துறை ஊழியருக்கு பணி வழங்கலாம் என உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அஞ்சல் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர். ஷா, பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியதாவது:
ஊழல் செய்த அஞ்சல் துறை ஊழியர் அஞ்சல் துறையில் கையாடல் செய்த ரூ.16.59 லட்சத்தையும், அதற்கான வட்டித் தொகையாக ரூ.1.42 லட்சத்தையும் அஞ்சல் துறையிடம் செலுத்தியுள்ளார்.
அஞ்சலகத்தில் பணிபுரியும் குற்றமிழைத்த அதிகாரி, மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டவுடன் அந்தத் தொகையை செலுத்தியுள்ளார். இதனால் மட்டுமே அந்த ஊழியர் மீது எந்த கருணையையும் காட்ட முடியாது.
அஞ்சல் துறையில் நம்பிக்கை தரும் பதவியில் இருந்துகொண்டு அவர் செய்த மோசடியை ஏற்று கொள்ள முடியாது.
அவர் பணத்தைத் திருப்பிச் செலுத்தியதால் அஞ்சல் துறைக்கு எந்தவித நஷ்டமும் ஏற்படவில்லை என்று கூறினாலும், அவர் செய்த குற்றத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதுபோன்ற ஊழியர்க்கு கருணை காட்டவும் முடியாது.
துறையின் நன்மதிப்பு, பெயர் மற்றும் புகழ் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதன் நம்பகத்தன்மை ஆகியவற்றால் துறைக்கு ஏற்பட்ட இழப்பு பற்றி என்ன கூற முடியும்? இதுபோன்ற ஊழியர்களின் நடத்தையால் சம்பந்தப்பட்ட துறையின் புகழ் மாசடைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. எனவே ஒழுங்குமுறை ஆணையம் எடுத்த, ஊழியர் மீதான கட்டாய ஓய்வு தண்டனை செல்லும். சென்னை உயர் நீதிமன்றம், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ஆகியவை அளித்த தீர்ப்புகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று குறிப்பிட்டனர்.
Leave a Reply