இனி தப்பிக்கவே முடியாது… வகுப்புகளை, ‘கட்’ அடிக்கும் மாணவர்களை பிடிக்க தனிக்குழு..!

பாட வேளைகளில் வகுப்புகளை புறக்கணித்து, விதிகளுக்கு புறம்பாக நடமாடும் மாணவர்களை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பாட வேளைகளில் வகுப்புகளை புறக்கணித்து, பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் பள்ளியின் பிற பகுதிகளில், விதிகளுக்கு புறம்பாக நடமாடும் மாணவர்களை கண்காணித்து, அவர்கள் வகுப்புக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, ஆசிரியர் குழு இணைந்து செயல்பட வேண்டும். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களை ஒருங்கிணைத்து, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலையில், 45 நிமிடங்கள் கூட்டு பயிற்சி என்ற, ‘மாஸ் டிரில்’ நடத்த வேண்டும்.

அரசு நகராட்சி, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், மாணவர்களின் ஒழுங்கு கட்டுப்பாட்டை பராமரிக்க, உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், தலைமை ஆசிரியர்கள் இணைந்து குழுவாக செயல்பட வேண்டும். மாணவ – மாணவியர் பள்ளி சீருடையில் வருவதை கண்காணிக்க வேண்டும். காலை வழிபாட்டு கூட்டத்தை, மாணவர்களை ஒருங்கிணைத்து நடத்துவதுடன், யோகா அல்லது தியான பயிற்சியுடன் கூட்டத்தை முடிக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்..