ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: திரில் வெற்றி- செம குஷியில் மக்கள்.. உடனே வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..!!

புது டெல்லி: ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இந்த வெற்றியை நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களான அகமதாபாத், மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு நகரங்களை சேர்ந்த மக்கள் கொண்டாடி உள்ளனர்.

பிரதமர் மோடியும் இந்திய அணிக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நடப்பு ஆசிய கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டியில் பலப்பரீட்சை செய்தன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது. பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து அந்த இலக்கை விரட்டிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோலி, ஜடேஜா, ஹர்திக், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்கள் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.

கடந்த முறை இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொண்ட போது பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் துபாய் மைதானத்தில் இந்த தோல்வியை சந்தித்தது இந்தியா. தற்போது அதே பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதே மைதானத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியை நாடு முழுவதும் உள்ள மக்கள் வீதிகளில் இறங்கி கொண்டாடி வருகின்றனர். அகமதாபாத், மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களை சேர்ந்த மக்கள் இந்த வெற்றியை கொண்டாடினர்.

முக்கியமாக பிரதமர் மோடி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “ஆசிய கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பான ஆல் ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணி வீரர்கள் அபார திறமையையும், உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளது. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்” என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.