இந்தி பேச தெரிந்தவர்தான் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக முடியுமா..? சசி தரூர் சர்ச்சை கருத்து ..!

திருவனந்தபுரம்: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலை முன்வைத்து அக்கட்சியின் மூத்த தலைவ சசி தரூர் கூறிவரும் கருத்துகள் அக்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான குழு அமைக்கப்பட்டு தேர்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன.

தற்போதைய நிலையில் சோனியா குடும்பத்தைச் சேர்ந்த யாரும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடவில்லை. அதேநேரத்தில் சோனியா குடும்பத்தினர் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை தங்களது வேட்பாளராக களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக அதிருப்தியாளர்களின் வேட்பாளராக சசி தரூர் நிறுத்தப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக சசி தரூரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது பூடகமான பதில்களையே சசி தரூர் கூறி வருகிறார். திருவனந்தபுரத்தில் நேற்று நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சசி தரூரிடம் செய்தியாளர்கள், காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சசி தரூர், நீங்கள் அரசியலில் இருந்தால் இந்தி பேச தெரிந்திருக்க வேண்டும். தென்னிந்தியாவை சேர்ந்தவர்களும் இந்தி பேசுகின்றனர். நானும் இந்தி பேசுவேன். இந்தி பேசுகிறவர்தான் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக வேண்டும் எனில் அதை வாக்களிப்பின் மூலம் நிரூபிக்க வேண்டும் என்றார். செய்தியாளர்கள் மலையாளத்தில் கேள்வி எழுப்ப, இந்தியில்தான் சசி தரூர் பதிலளித்தார்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி தேர்தலில் வாக்களிப்பவர் பட்டியலை பகிரங்கப்படுத்த முடியாது என அக்கட்சியின் தேர்தல் குழு தெரிவித்திருந்தது. இதற்கு மூத்த தலைவர் மணிஷ் திவாரி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மணிஷ் திவாரியின் கருத்துக்கு லோக்சபா எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் மற்றொரு எம்.பி. மாணிக்கம் தாகூர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்தி பேச தெரிந்தவர் என்கிற ஒரு புதிய விவகாரத்தை சசி தரூர் எழுப்பி இருக்கிறார்.

இதனிடையே சசி தரூர், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதியானவரே என்று கேரளா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.சுதாகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுதாகரன் கூறுகையில், சசி தரூர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராகப் போட்டியிடுவதாக வந்த செய்தி பற்றி எதற்கு ஆச்சரியப்பட வேண்டும். சசி தரூர் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்குத் தகுதியான வேட்பாளர்தான் என்றார்.