கோவையில் ஆதரவற்ற முதியவரின் தலையில் கல்லை போட்டு கொடூர கொலை: இளைஞர் கைது-விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை: இளைஞர் கைது.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் மது குடிக்க வேண்டாம் எனக் கூறிய முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவத்தில், 22 வயதான இளைஞர் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வாரம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கடை ஒன்றின் வாசல் முன்பு இரவில் உறங்கிக் கொண்டிருந்த ஆதரவற்ற முதியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார், முதியவரின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் பண்ணாரி என்பதும், ஆதரவற்றவரான அவர், இரவு நேரத்தில் அதே பகுதியில் உள்ள கடை வாசலில் படுத்து உறங்கி வந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், கோவையை சேர்ந்த சரவணகுமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மது குடிக்க வேண்டாம் என பண்ணாரி அறிவுரை கூறியதாகவும், அப்போது மதுபோதையில் இருந்த சரவணகுமார், ஆத்திரத்தில் பண்ணாரி தலையில் கல்லை போட்டு கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இளைஞர் சரவணகுமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.