குட்டைக்கு குளிக்க சென்ற அண்ணன், தம்பி நீரில் மூழ்கி பரிதாப பலி..

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள காக்கா பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். கட்டிட தொழிலாளி. அவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு தீபக் குமார் ( வயது 10) வெற்றிவேல்( வயது 8) ஆகிய இருமகன்கள் உள்ளனர். காக்காபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீபக் குமார் 5-ம்வகுப்பும் வெற்றிவேல் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர் .இந்த நிலையில் கோடை விடுமுறை என்பதால் அண்ணனும் தம்பியும் நேற்று அங்குள்ள ஒரு குட்டையில் குளிப்பதற்காக சைக்கிளில் சென்றனர். அதன் பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை .உடனே பெற்றோர்கள் அவர்களை தேடிச் சென்றனர். அப்போது குட்டையின் வெளியே தீபக்குமார், வெற்றிவேல் ஆகியோரது சைக்கிள் மற்றும் உடைகள் இருந்தது .இதை பார்த்ததும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குட்டைக்குள் இறங்கி தேடினார்கள். அப்போது தீபக் குமார் ,வெற்றிவேல் குட்டையில் மூழ்கி கிடப்பது தெரியவந்தது .உடனே 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் .தொடர்ந்து தீபக்குமார் ,வெற்றிவேல் ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. குட்டையில் குளிக்க சென்ற அண்ணன் -தம்பி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.