ஆபத்தான கைதிகளை கண்காணிக்க வந்துவிட்டது… காவலர்களுக்கான பாடி வோர்ன் கேமரா..!

மிழ்நாடு சிறைகளில் ஆபத்தான கைதிகளை கண்காணிக்க, காவலர்களுக்கு பாடி வோர்ன் கேமராக்கள்(Body worn camera) வழங்கப்பட்டுள்ளன.

சென்னை: தமிழ்நாடு சிறைத்துறையின்கீழ் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 96 கிளைச்சிறைகள், 5 பெண்கள் சிறப்பு சிறைகள், 12 பார்ஸ்டல் பள்ளிகள், தலா 3 திறந்தவெளி சிறைகள், சிறப்பு சிறைகள் என மொத்தம் 142 சிறைகள் உள்ளன.

பல்வேறு வழக்குகளில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு படிப்பு, தொழில் எனப் பல வசதிகள் சிறைத்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் புஜாரி பொறுப்பேற்ற பிறகு, சிறைக்கைதிகளுக்காக பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

சிறைக்கைதிகளை சந்திக்க வரும் அவரது உறவினர்களிடம் எளிமையாக பேசும் வகையில் இண்டர்காம் வசதியும், சிறைக்கைதிகள் வெளியே சென்றவுடன் எளிதாக வேலை கிடைக்கும் வகையில் ஆதார் கார்டு வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த வகையில் தற்போது முதல்முறையாக தமிழ்நாடு சிறைகளில் ஆபத்தான கைதிகளை கண்காணிக்க 46 லட்ச ரூபாய் செலவில் 50 பாடி வோர்ன் கேமராக்கள் (Body Worn Camera) சிறைத்துறை சார்பில் வாங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இவை சிறைகளில் ஆபத்தான கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் பிளாக்கில், சுற்றுக்காவல் செல்லும் காவலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை சார்பில், “முதற்கட்டமாக மத்திய புழல் சிறையில் பாடி வோர்ன் கேமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்தகட்டமாக ஒரு வாரத்தில் அனைத்து 9 மத்திய சிறைகளிலும் அறிமுகப்படுத்தப்படும். இந்த பாடி வோர்ன் கேமராவின் லைவ் காட்சிகள், எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்” என சிறைத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை காவலர்கள் ரோந்து பணிக்காக பாடி வோர்ன் கேமராவை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது சிறைக்காவலர்கள் பாடி வோர்ன் கேமராவை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.