“மாண்டஸ்” புயல் எதிரொலி … 28 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து 390 கிலோ மீட்டா், காரைக்காலில் இருந்து 310 கிலோ மீட்டா் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 85 கிலோ மீட்டா் வேகம் வரை காற்று வீச வாய்ப்பு உள்ளது. இப்புயலானது இன்று நள்ளிரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது.

இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இன்று அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், தருமபுரி, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, திருச்சி,திருப்பத்தூர், சிவகங்கை, கொடைகானல், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் தேனி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளுவர், அண்ணா மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைகழகம்,சட்டப் பல்கலைகழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழ்நாடு முழுவதும் பாலிடெக்னிக் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.